விமானத்துறையில் பணிபுரிய ஆசைப்பட்டு ரூ.13 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்
தொழில்நுட்ப வசதிகள் ஒருபுறம் வளர்ந்து வந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய அசௌகர்யங்களும் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சமீப காலமாக ஆன்லைன் வேலை என்ற மோசடியில் சிக்கி பலரும் லட்சக்கணக்கில் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். அதுபோன்று தான் பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் விமானத்துறையில் பணிபுரிய ஆசைபட்டு, மோசடிக்காரர்களிடம் ரூ.13.5 லட்சத்தை இழந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதையும் கூட ஒரு மாதம் கழித்தே இவர் உணர்ந்துள்ளார்.
43 வயதாகும் சச்சிதானந்தா, பெங்களூரில் உள்ள அஞ்சன்புராவில் வசித்து வருகிறார். ஐடி துறையில் வேலை பார்த்து வந்தாலும், இவருக்கும் விமானத் துறையில் பணியாற்ற வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது. அதை நிறைவேற்ற பல முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு விமானத்துறை பணிக்காக நிறுவனம் ஒன்றில் விண்ணப்பித்திருக்கிறார்.
சரியாக ஆகஸ்ட் 16-ம் தேதி அவரது போனிற்கு அழைப்பு வந்துள்ளது. எதிர்முணையில் பேசியவர், தான் ஒரு முன்னனி விமான நிறுவனத்தில் பணி புரிவதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு சீனியர் ரோலில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுவதாகவும் இந்தப் பணியில் சேர்ந்தால் வருடத்திற்கு ரூ.46 லட்சம் சம்பளமாக கிடைக்கும் என கூறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு சச்சிதானந்தாவை ஆன்லைன் வழியாக நேர்காணல் செய்த அந்த நபர், நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்ற விவரத்தையும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் வேலையில் சேர்வதற்கான கடிதத்தை அனுப்புவதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும் எனக் கூறி, மருத்துவ செலவிற்காகவும் ஆவணங்கள் சரிபார்க்கவும் என கூறி குறிப்பிட்ட தொகையை அனுப்புமாறு கேட்டுள்ளார் அந்த மோசடி நபர். இதெல்லாம் ஏமாற்று வேலை என்று உணராத சச்சிதானந்தாவும் உடனடியாக ரூ.13.54 லட்சத்தை அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு எந்தவொரு அழைப்பும் அவரிடம் இருந்து வரவில்லை. இவராலும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இவரும் நமக்கு எப்படியும் வேலையில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வந்துவிடும் என ஒரு மாத காலத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த சச்சிதானந்தா, தற்போது கால்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இவரிடம் பணம் வசூலித்த அந்த நபர் இன்னும் போலீசிடம் சிக்கவில்லை.
இதேப் போன்ற சம்பவம் ஒன்றில் பெங்களூரைச் சேர்ந்த 30 வயதாகும் ஐடி ஊழியர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் பெண்ணிடம் நட்பாகி, அவரிடம் ரூ.2.6 லட்சத்தை இழந்துள்ளார். ஆரம்பத்தில் ஆன்லைன் மூலம் பழக்கமான இவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கவே, அடிக்கடி வாட்ஸ்அப் மூலமாக வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது இதையெல்லாம் அந்தப் பெண் ரெக்கார்டு செய்து வைத்து கொண்டு, பணம் தராவிட்டால் இதையெல்லாம் இணையத்தில் கசிய விட்டுவிடுவேன் என பிளாக்மெயில் செய்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார்.