வயிற்றில் இயர்போன் உள்ளிட்ட 100 பொருட்கள்.. வைத்தியர்கள் அதிர்ச்சி !
கடும் வயிற்றுவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயதான ஒரு நபரின் வயிற்றில் இருந்து வயர்கள், இயர்போன்ஸ், சேஃப்டி பின் என கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 40 வயதான ஒருவர் வாந்தி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சில அடிப்படை சிகிச்சைகள் அளித்தும் அவருக்கு வயிற்று வலி குறையாததால், அதற்கான காரணத்தை கண்டறிய எக்ஸ்ரே ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
எக்ஸ்ரே முடிவை பார்த்த மருத்துவர்கள் திகைத்து போயினர். காரணம் அந்த நபரின் வயிற்றில் எண்ணற்ற உலோக பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருக்கும் பொருட்களை அகற்ற முடிவு செய்தனர். இதனையடுத்து 3 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில் அந்த நபரின் உடலில் இருந்து இயர்போன்ஸ், வயர்கள், போல்ட்ஸ், வயர் கம்பிகள், லாக்கெட்ஸ்கள், பட்டன்கள், ரேப்பர்கள் மற்றும் சேஃப்டி பின்ஸ், ஹேர் கிளிப்ஸ், மார்பிள் பீஸ் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டன.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த நபர் கடந்த 2 ஆண்டுகளாக வயிறு தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவரது வயிற்றில் இருந்து ஏராளமான பொருட்கள் அகற்றப்பட்ட போதிலும், அந்த நபரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் சர்ஜரி செய்து எடுக்கப்பட்ட பொருட்கள் அவரது வயிற்றில் நீண்ட நாட்களாக இருந்ததால், வேறு பல உடல்நலக்குறைவு அவருக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரும் இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏனென்றால் அவர்களுக்கு குறிப்பிட்ட 40 வயதான நபர் இதுபோன்ற பொருட்கள் எல்லாம் சாப்பிடுவார் என்பது தெரியாது. கூடுதலாக ஆப்ரேஷன் செய்யப்பட்ட நபருக்கு மனநல பாதிப்பு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறி இருக்கிறார்கள். ஆப்ரேஷன் செய்யப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாகவும் இதனால் தூங்க முடியவில்லை என்றும் குடும்பத்தினரிடம் கூறி இருக்கிறார்.
பாதிக்கப்பட நபருக்கு ஆப்ரேஷன் செய்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் அஜ்மீர் கல்ரா கூறுகையில், தனது நீண்டகால மருத்துவ அனுபவத்தில் இது தான் சந்தித்த விசித்திரமான கேஸ் என்று குறிப்பிட்டார். 2 ஆண்டுகளுக்கும் மேலான நோயாளியின் வயிற்று பிரச்னைகளுக்கு காரணமான பொருட்களை வெற்றிகரமாக அகற்றி இருக்கிறோம். ஆனாலும் அவரது வயிற்றில் நீண்ட காலமாக இருந்த உலோக பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களின் பின்விளைவால் அவருக்கு சில கூடுதல் உடல்நல சிக்கல்கள் காணப்படுகிறது என்றார்.