சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் டீசர் வெளியாகிறது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது. ஒருவழியாக இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில், ‘அயலான்’ படத்தின் டீசரை வரும் அக். 6ஆம் தேதி படக்குழு வெளியிட இருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருவதாக இயக்குநர் ரவிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் டீசருக்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.