விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால், இசை வெளியீட்டு விழாவை திமுக அரசு தடுக்கிறது!
தமிழ்நாடு இடையே காவிரி விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் பிரச்னை தீவிரமடைந்துவருகிறது. `தண்ணீர் தருவதில்லை’ என கர்நாடகா தீவிரமாக இருக்கிறது. அதன் காரணமாக, தொடர்ந்து இரு மாநில எல்லைகளில் பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எளிமையைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த முன்னோடி தலைவர் காமராஜர். அவருக்கு எங்களின் புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். காவிரி விவகாரத்தில் 1971-களில், இதற்கான தீர்வு வந்திருக்க வேண்டியது. அதைக் கெடுத்ததே கலைஞர் கருணாநிதிதான்.
காவிரி, கச்சத்தீவு இதெல்லாம் இருந்தால்தான் இவர்களால் அரசியல் செய்ய முடியும். தேசியக்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், பா.ஜ.க ஆகியவைகூட தாங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்துக்கு உண்மையாக இருக்கின்றன. அமைச்சர் துரைமுருகன், `இந்தியன் என்ற உணர்வில் தண்ணீர் கொடுங்கள்’ எனக் கேட்கிறார். ஏன் திராவிடர் என்ற உணர்வில் தண்ணீர் கேட்கவில்லை… கன்னடர், தெலுங்கர், மலையாளி ஆகியவர்கள் திராவிடர்கள்தானே… எனவே, திராவிடம் என்பதெல்லாம மாநிலத்துக்குள் செய்யப்படும் அரசியல். இப்போதாவது இறையாண்மை, தேச ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு பேசியவர்கள் வாய் திறக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கர்நாடகாவுக்கு எதிராக முதல்வர் ஏன் போராடவில்லை… காரணம் காங்கிரஸுடன் கூட்டணி. தண்ணீர் தராதவர்களுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கலாமே! தேர்தலுக்காகத்தான் காவிரி விவகாரத்தில் தி.மு.க அமைதியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் நடிகர்களும் கர்நாடகர்களாக இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதால், அவரின் இசை வெளியீட்டு விழாவைத் தடுத்திருக்கிறது தி.மு.க” என்றார்.