துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல்.
துருக்கி தலைநகர் ஆங்காராவில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் அருகே தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் பிரதான பாராளுமன்ற கட்டிடத்திற்கு வடக்கே உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு முன்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல் அதிகாரிகள் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கியின் பாராளுமன்றம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சின் கட்டிடத்திற்கு முன்பு நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு இரண்டு பயங்கரவாதிகள் காரணம் எனவும், அவர்களில் ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டதாகவும், மற்றொருவரை பாதுகாப்பு படை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகவும் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணியளவில் நகரின் மையப்பகுதியில் உள்ள கிசிலாய் பகுதியில் பலத்த குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதனைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தடுப்புகளை அமைத்து அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டு வந்துள்ளனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும், உள்துறை அமைச்சக கட்டிடத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு துருக்கி நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. அந்நாட்டு அதிபர் தையிப் எர்டோகன் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
துருக்கிய அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.