“சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த முயற்சி …” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரத்தை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது அதன்படி, பிகாரின் மக்கள் தொகை 13 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் பிற்படுத்தப்பட்டோர் 27 .13% இருப்பதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 36.01% இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவினர் 15.52% இருப்பதாகவும், பீகார் மாநில கூடுதல் தலைமை செயலாளர் விவேக் குமார் சிங் தெரிவித்துள்ளார். பட்டியல் சமூகத்தில் 19% மக்கள் இருப்பதாகவும், பழங்குடியினர் 1.68% மக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை 81 .99% இருப்பதும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17 .7% இருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட உதவிய அனைத்து குழுவினருக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ஆட்சியில் இருந்தபோது வளர்ச்சி பணிகளைச் செய்யத் தவறியவர்கள், தற்போது ஏழைகளின் உணர்வுகளில் விளையாடுவதாகவும் கடுமையாக சாடினார்.
முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் சாதியின் பெயரால் நாட்டைப் பிரித்தார்கள், தற்போதும் அதையே செய்கிறார்கள் என வேதனை தெரிவித்தார். அத்துடன், சாதி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் பாவம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.