சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது இலங்கை – ஜனாதிபதி ரணில் திட்டவட்ட அறிவிப்பு.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
ஜேர்மனி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சனல் 4 தொலைக்காட்சியின் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை இலங்கை முழுமையாக நம்பவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசு சர்வதேச விசாரணையை நடத்தாது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் வெளித் தரப்பின் தலையீடு இல்லை என அமெரிக்கா எப்.பி.ஐ. அறிக்கை வழங்கியுள்ளது.
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இரகசியப் பொலிஸாரும் அறிக்கைகளை வழங்கியுள்ளனர்.
எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் உட்பட இலங்கையில் எந்தவொரு விடயத்துக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்படாது” – என்றார்.