விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பது ஆபத்து : தமிழர்களை எச்சரிக்கின்றது சஜித் அணி
“தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து வீண்விளைவுகளைச் சந்திக்க வேண்டாம் என்று வடக்கு, கிழக்குத் தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பிலும், தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த நல்லாட்சியில் இருந்த சுதந்திரத்தை இந்த ஆட்சியிலும் தமிழர்கள் எதிர்பார்க்கக்கூடாது. தமிழர்கள் நாட்டின் சட்டத்துக்கும் இறையாண்மைக்கும் மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.
போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரத் தமிழர்களுக்கு உரிமை உண்டு. அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், உயிரிழந்த பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர இந்த நாட்டில் எவருக்கும் உரிமை இல்லை.
விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் புலிகளின் பாணியில் செயற்படுவதை நிறுத்த வேண்டும். நாட்டில் மீண்டும் இனவாதப் போரைத் தூண்டும் வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டதை எவரும் கண்டிக்க முடியாது. நீதிமன்றத்தின் தடையுத்தரவை எவரும் மீறினால் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். இதை அறிந்தும் திலீபனைச் சிவாஜிலிங்கம் நினைவுகூர்ந்ததை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.