சம்பந்தனுடன் புதிய பிரிட்டிஷ் தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான புதிய பிரிட்டிஷ் தூதுவர் அண்ட்ரூ பற்றிக், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இந்தப் பேச்சின்போது சில விடயங்களைப் புதிய பிரிட்டிஷ் தூதருக்குச் சம்பந்தன் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.
அவர் மிகச் சுருக்கமாகக் கூறிய விடயத்தின் சாராம்சம் வருமாறு:-
”உங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், உங்களின் காலனித்துவ நாடான இலங்கையை விட்டு வெளியேறிய போது, அச்சமயம் உங்கள் நாட்டில் இருந்த ஆட்சி முறையை அப்படியே இங்கும் கையளித்து விட்டுச் சென்றுவிட்டீர்கள். ஆனால், அதற்குப் பின்னர் நீங்கள் உங்களின் ஆட்சி முறைமைகளைச் சீர்படுத்திக் கொண்டீர்கள். ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் எல்லாவற்றுக்கும் தாராளமாக அதிகாரப் பகிர்வைச் செய்து, சீரான உச்ச ஆட்சி முறைமையை உருவாக்கி, குடிமக்களின் நெறிமுறையான வாழ்வை உறுதிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் இங்கு விட்டுச் சென்ற ஆட்சிப் பாணியைக் கைவிட்டுத் திருந்த – திருத்த – மறுக்கும் இலங்கை, அதன் மூலம் பேரழிவின் விளிம்புக்கு வந்து நிற்கின்றது. இந்த ஆட்சி முறைமையே தொடருமானால் இங்கு ஒரு மக்கள் குழுமமாக தமிழர்கள் வாழ்வது சாத்தியப்பாடற்றதாகிவிடும்” – என்று அறுத்து, உறுத்துக் கூறினார் சம்பந்தன்.