சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்..! – தேடும் பணி தீவிரம்!
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர்.
கரைபுரண்டோடிய வெள்ளம்
சிக்கிமின் வடக்குப்பகுதியில் உள்ள ஹோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, லாச்சென் சமவெளியில் பாயும் தீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுங்கடங்காத காட்டாறு வெள்ளம் காண்போரை கதிகலங்க வைத்துள்ளது. சுங்க்தாங் என்ற நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரும் இந்த வெள்ளத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. திடீரென 20 அடி உயரத்துக்கு கரைபுரண்டோடிய ஆற்று வெள்ளத்தால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.
இதனிடையே, தீஸ்டா நதியின் அருகே பர்தாங்க் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதில், 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.
இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.