பிக் பாஸ் – 7 `இது தப்பா இருக்கு!’ -பவா செல்லத்துரை சொன்ன கதை.
‘நீ கேப்டன் ஆவறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. ஆனா நான் சொல்ற ஆறு பேரைத் தூக்கணும். ஓகேவா?” என்று கூலிப்படை ரேஞ்சிற்கு விஷ்ணுவிடம் டீல் பேசிக் கொண்டிருந்தார்.
இலக்கிய வாசிப்பு, ரசனை இல்லாத பொது சமூகத்திடம், குறிப்பாக இளையதலைமுறையிடம் ஓர் இலக்கிய படைப்பை தடாலென்று கொண்டு சேர்த்தால் அவர்கள் எப்படியெல்லாம் குழம்புவார்கள், மிரளுவார்கள், தலைகீழாகப் புரிந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த எபிசோட் ஒரு நல்ல உதாரணம். இது அவர்களின் குற்றமல்ல. இலக்கியத்தை சரியாகக் கொண்டு போய்ச் சேர்க்காத சமூகத்தின் குற்றம்
பவா பகிர்ந்து கொண்ட ஓர் இலக்கியக் கட்டுரை (அது கதையல்ல, அனுபவக் கட்டுரை) பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி விட்டது. பார்வையற்றவர்கள் யானையை தடவிப் பார்த்து புரிந்து கொள்வதைப் போல அந்தப் படைப்பை கொத்து பரோட்டா போட்டு எப்படியெல்லாம் குழம்ப வேண்டுமோ அந்தத் திசையில் தவறாக புரிந்து கொண்டார்கள்.
ஆனால் இது ஒரு நல்ல விஷயம்தான். ‘யாரு தட்டை சரியாக் கழுவல..? ‘யாரு முட்டையை எடுத்தது?’ என்பது போன்ற அற்பமான விஷயத்திற்குத்தான் இதுவரை பிக் பாஸ் வீட்டில் சண்டை நடைபெற்றிருக்கிறது. முதன்முறையாக ஒரு இலக்கியப் படைப்பு தொடர்பாக விவாதம் ஏற்படுவது நல்ல விஷயம்தான்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
எபிசோடின் ஆரம்பத்திலேயே ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்தைத்தான் ‘ஓப்பனிங் சீன்’ ஆக காட்டுகிறார்கள். மாயா சொன்ன ஏதோவொன்றை ‘கூல்’ சுரேஷ் கிண்டலடித்து மாயா அதற்கு ஆட்சேபித்திருப்பார் போலிருக்கிறது. அடுத்த முறை சுரேஷ் இருக்கிற பக்கம் மாயா சென்ற போது சுரேஷ் ‘உர்’ரென்று பார்த்திருக்கிறார். `இப்ப என்ன பிரச்னை… வாங்க பேசலாம்’ என்று விதம் விதமாக மாயா அழைத்தும் சுரேஷ் அதை அலட்சியமாக நிராகரி்த்தது மாயாவின் மனதைப் புண்படுத்தியது. சுரேஷிற்கு ஆதரவாக விஷ்ணு களத்தில் இறங்க மாயாவின் சண்டை அங்கேயும் பரவியது. மனிதர்களின் அகங்கார உரசல் அற்பமான காரணத்திற்கு கூட எப்படியெல்லாம் நிகழும் என்பதற்கு இந்தக் காட்சி உதாரணம்.
‘சோ காமா’ என்கிற ரகளையான பாடலுடன் நாள் 3 விடிந்தது.
சுரேஷ் வழக்கம் போல் பாம்பு டான்ஸ் ஆடினார். ‘கோப்பை முக்கியம் பிகிலு’ என்கிற கொலைவெறி டார்கெட்டுடன் ஒவ்வொரு சீசனிலும் ஒருவர் இருப்பார். பிக் பாஸ் வெற்றி குறித்தே எப்போதும் சிந்திப்பார்கள். இந்த சீசனில் அது பிரதீப். மனிதர் நடந்தாலே அதுவொரு ஸ்டராட்டஜியாக இருக்கிறது. ‘நீ கேப்டன் ஆவறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்.. ஆனா நான் சொல்ற ஆறு பேரைத் தூக்கணும். ஓகேவா?” என்று கூலிப்படை ரேஞ்சிற்கு விஷ்ணுவிடம் டீல் பேசிக் கொண்டிருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் அடித்த இலக்கியச் சூறாவளி
பிறகு ஆரம்பித்தது அந்த நீண்ட இலக்கியப் பஞ்சாயத்து. “நான் கதை சொல்லும் போது இடையூறு இல்லாம இருந்தா நல்லாயிருக்கும். அங்க போறது.. இப்படி நடக்கறது.. ன்னு நீங்க டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நல்லாயிருக்கும்.. இல்லாட்டி கவனச்சிதறல் ஏற்படும்.. ஓகே..?” என்று ஆரம்பித்த பவா செல்லத்துரை, கமல் தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.
கமலின் நற்பணி மன்ற ஆண்டு விழாவில் தலைமை தாங்குவதற்காக தனக்குப் பிடித்த எழுத்தாளரான ஜெயகாந்தனை கமல் அழைத்து வந்திருக்கிறார். ஜெயகாந்தனை வாசித்து அறிந்தவர்களுக்குத் தெரியும். தமிழ் எழுத்தாளர்களிலேயே ஒரு கம்பீரமான ஆளுமை. மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஜெயகாந்தனை நோக்கி ரசிகர்களின் மத்தியில் இருந்து ஒரு உரத்த குரல் வந்தது. ‘யார்ரா அவன்.. என் தலைவன் முன்னாடியே கால் போட்டு உக்காந்திருக்கிறது.. காலை இறக்குடா’..
கமல் ஆவேசமாக எழுந்து வந்து மைக்கைப் பிடித்து ‘என்னுடைய அழைப்பின் பேரில் அவர் வந்திருக்கிறார். கத்திய நபர் உடனே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சொல்ல, அந்த ஆசாமியை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவருக்கு போலியோ காரணமாக கால்கள் இல்லை. ‘நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அது என்னுடைய கால்கள். அது நான் அமர வேண்டிய மேடை’ என்பது போல் அந்த ரசிகர் எதையோ சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை வைத்து ‘கால்’ என்னும் தலைப்பில் பிறகு பவா ஒரு சிறுகதையை எழுதினார்.
பவா பகிர்ந்து கொண்ட இந்தச் சம்பவத்தை விடவும் அடுத்ததாக பகிர்ந்து கொண்ட ஒரு கட்டுரைதான் பிக் பாஸ் வீட்டு மக்களிடையே புயலைக் கிளப்பியது. மலையாள எழுத்துலகில் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவர் புகழ்பெற்ற கவிஞர். அவர் தன் வாழ்க்கையில் கடந்த பல சம்பவங்களை கட்டுரையாக எழுதியிருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு ‘சிதம்பர நினைவுகள்’ என்கிற தலைப்பில் வெளிவந்து இங்கும் புகழ்பெற்ற நூலாக மாறியது. வறுமை, பசி, அவமதிப்பு, துரோகம் என்று தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பாசாங்கு ஏதும் இல்லாமல் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பதிவு செய்திருக்கிறார் பாலச்சந்திரன்.
அந்தக் கட்டுரைகளில் ஒன்றின் சுருக்கம் இது. வீட்டில் யாருமில்லாத மதியத்தில் அமர்ந்து ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறார் கவிஞர். கதவு தட்டப்படுகிறது. ஊறுகாய் விற்பதற்காக ஓர் இளம்பெண் வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் அழகு கவிஞரை தாக்குகிறது. தனிமை, யாருமில்லாத துணிச்சல் காரணமாக ஒரு சராசரியான ஆண் செய்வதை கவிஞரும் செய்கிறார். அத்துமீறி அந்தப் பெண்ணைத் தொட்டு விடுகிறார். ‘பளார்’ என்று ஒரு அறை விழுகிறது.
‘நீங்களும் விஜயலஷ்மி டீச்சரும் (கவிஞரின் மனைவி) ஒருமுறை எங்க காலேஜிற்கு வந்திருக்கீங்க.. நான் உங்க கிட்ட ஆட்டோகிராஃப் கூட வாங்கியிருக்கேன். வாழ வழியில்லாமத்தான் இப்படி வெயில்ல ஊறுகாய் விக்கறோம். இலக்கியவாதிங்களே இப்படி நடந்தா எப்படி? இதை நான் வெளில சொல்ல மாட்டேன். இப்படி கீழ்த்தரமா நடந்துக்கறதை இன்னியோட விட்டுடுங்க” என்று அந்தப் பெண் சொல்லும் வார்த்தைகள், கன்னத்தில் விழுந்த அறையை விடவும் கவிஞரை அதிகமாக கூனிக்குறுக வைக்கிறது.
தன்மானம் மிகுந்த அந்த இளம் பெண் பிறகு கவிஞரைச் சந்தித்து நட்பாகிறார். திருமணம் முடித்து தன் கணவனை அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார்.
இலக்கியத்தை எவ்வாறு புரிந்து கொள்வது?
இந்தக் கட்டுரையை பவா செல்லத்துரை தனது பாணியில் சொல்லி முடித்ததும் அது வீட்டிற்குள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ‘என்னா கதை இது.. மாரல் ஆஃப் த ஸ்டோரி என்ன?.. இந்தக் கதை தவறான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்காதா?’ என்று விசித்ரா முதல் ஜோவிகா வரை பலரும் வந்து பவாவை கேள்வி கேட்கிறார்கள். “ஒரு எழுத்தாளன்.. ஒரு பொண்ணோட தப்பா நடக்க முயற்சி பண்ணினானாம். அப்புறம் மன்னிப்பு கேட்டானாம்.. அப்புறம் ஒண்ணுமே நடக்காத மாதிரி ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸாம்.. என்னங்கடா இது?” என்றுதான் பொதுப்புத்திக்குத் தோன்றும்.
“செய்யற தப்பையெல்லாம் ரொமான்டிசைஸ் பண்ணி நார்மலைஸ் பண்ற மாதிரி இருக்கு” என்று நண்பர்களுடனான கலந்துரையாடலில் பூர்ணிமா சொன்னது நல்ல பாயிண்ட். சராசரியான வாசகர்களுக்கு அப்படித்தான் தோன்றும். அதனால்தான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னேன், இலக்கிய வாசிப்பு அதிகமில்லாத சமூகம், அதிர்ச்சிகரமான படைப்புகளை தவறாகப் புரிந்து கொண்டு ஆட்சேபத்தை எழுப்பும். இது இங்கு மட்டுமல்ல. உலகமெங்கும் எப்போதும் நடந்து கொண்டிருக்கிற விஷயம். எழுத்தாளர்கள் கொலை மிரட்டல்களுக்கு கூட ஆளாகியிருக்கிறார்கள்.
பாலச்சந்திரனின் அந்தக் கட்டுரை ஒருவகையான பாவமன்னிப்புக் கடிதம். கண்ணீருடன் கூடிய சுயவாக்குமூலம். அந்தக் கட்டுரையை முழுமையாக படித்தால்தான் அதில் வெளிப்பட்டிருக்கும் உணர்வுகளை ஒருவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். படைக்கும் போது மட்டும்தான் எழுத்தாளன் கடவுளுக்கு அருகில் இருக்கிறான். இதர நேரங்களில் அவன் ஒரு சராசரியான ஆசாமிதான். பாவம் செய்யாத, மனதில் அம்மாதிரியான எண்ணங்களை வைத்திருக்காத ஆசாமிகளே இவ்வுலகத்தில் கிடையாது.
ஆனால் பிரபலங்கள் உட்பட அத்தகைய கீழ்மைகளை மனதிற்குள் ஒளித்து வைத்துக் கொள்வார்கள்.
அது அம்பலம் ஆகாமல் பார்த்துக் கொள்வார்கள். அம்பலம் ஆனாலும் அதற்காக பல்வேறு நியாயம் கற்பிப்பார்கள். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் நேர்மையுள்ள எழுத்தாளன் மட்டுமே இதை எழுத்தில் நேரடியாக பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அவன் சொல்ல வருவது, நீங்களும் இப்படிச் செய்யுங்கள் என்பதல்ல. ‘நான் இப்படி ஒரு பாவத்தைச் செய்தேன். அது என் ஆன்மா வரை சென்று துன்புறுத்துகிறது’ என்று கண்ணீரோடு சொல்லும் போது அது வாசிப்பவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். நேரடியான நீதிக்கதைகளை விடவும் தவறை உணர்ந்து கண்ணீர் விடும் கதைகள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
இது போன்ற படைப்புகளை இந்தக் கோணத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும். இலக்கிய, திரைப்பட ரசனையோ பயிற்சியோ இல்லாத சமூகத்தில் இது போன்ற தவறான புரிதல்கள்தான் ஏற்படும். பிக் பாஸ் வீடும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘எனக்குப் புரியல..’ என்று பவாவிடம் நேராக வந்து கேட்ட ஜோவிகா பாராட்டுக்குரியவர். மற்றவர்கள் மூலைக்கு மூலை நின்று தப்பும் தவறுமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். இலக்கிய வாசிப்பு இருக்கிற மாயா கூட கதை சொல்லும் போது ஆமோதிப்பது போல் தலையசைத்து விட்டு பிறகு நண்பர்களிடம் எதிர்மறையான கருத்து அதிகமான போது அங்கும் இணைந்து ஜோதியில் ஐக்கியமானது ஒரு முரணான விஷயம். நமக்கென்று ஒரு தனியான கருத்து இருந்தால் கூட, மந்தையில் இணையும் போது அதன் போக்கிற்கு நாமும் இணைந்து விடும் அபத்தத்தையே மாயாவும் செய்தார்.
பவா காட்டிய அசட்டுத்தனமான பிடிவாதம்
பவா பகிர்ந்து கொண்ட கட்டுரையை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வறுத்து எடுத்தது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு விஷயத்தில் பவா அளித்த அசட்டுத்தனமான விளக்கம், இலக்கியப் புரிதலின்மையை விடவும் கொடுமையாக இருந்தது. வீட்டில் ஆங்காங்கே எச்சில் துப்பும் பழக்கம் பவாவிற்கு இருக்கிறது. இது பற்றி பிரதீப் பேசும் போது ‘உங்களை மாதிரி ஆளுங்களை எனக்கு பிடிக்கும் சார்.. நீங்க இந்த வீட்டுல இன்னமும் அதிக நாள் இருக்கணும்னு ஆசைப்படறேன். அதனால சில விஷயங்களை நீங்க மாத்திக்கிட்டா நல்லாயிருக்கும்” என்று கண்ணீர் தழுதழுக்க சொன்னதில் உண்மையான அன்பு தெரிந்தது.
ஆனால் பவாவோ ‘யாருக்காகவும் எதற்காகவும் என் இயல்பை மாத்திக்க முடியாது. டக்குன்னு எப்படி மாத்திக்க முடியும்?’ என்று பதில் சொன்னது ரசிக்கத்தக்கதாக இல்லை.
ஜெயகாந்தன் மேடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார் என்றால் அது யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத விஷயம். அது அவரது உரிமை. ஆனால் பொது இடங்களில் எச்சில் துப்புவது என்பது மற்றவர்களையும் பாதிக்கக்கூடிய, சுகாதாரம் தொடர்பான விஷயம். பவாவிற்கு இந்த வழக்கம் தன்னிச்சையாக நீண்ட காலம் இருக்கலாம். அவர் விவசாயமும் செய்யும் கிராம மனிதர் என்பதால் சட்டென்று துப்புவது ஒரு பழக்கமாகக்கூட ஆகி விட்டிருக்கலாம். ஆனால் அதை எல்லா இடத்திலும் அவர் பின்பற்ற முடியாது. பின்பற்றக்கூடாது. ஒருவர் அதைச் சுட்டிக் காட்டும் போது ‘சாரிப்பா. அப்படியே பழகிடுச்சு.. இனிமே மாத்திக்கறேன்’ என்று சொல்வதுதான் சரியான விஷயம். தனிமனித சுதந்திரம் என்கிற பெயரில் எதையும் நியாயப்படுத்தக் கூடாது.
‘Know your Housemates’ என்கிற டாஸ்க் தொடர்ந்தது ‘யார் அதிக புகழ் கொண்டிருக்கிறார்கள்?’ என்கிற தலைப்பில் மாயாவும் விஷ்ணுவும் விவாதிக்க வேண்டும். இதில் தலைப்பிற்குத் தொடர்பான விஷயத்தை மட்டும் மாயா பேசினார். ஆனால் முன்தினம் நடந்த சண்டை காரணமாக இருக்கிற கோபத்தை விஷ்ணு இப்போது காட்டி விட்டார் போல. தலைப்பிற்குத் தொடர்பில்லாமல் தாண்டி வந்து மாயா மீது வார்த்தைகளால் தாக்குதல் தொடுத்தார். வாக்களித்த மக்களும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு மாயாவிற்கு ஆதரவாக வாக்களித்தது சரியானது.