ஒரே போட்டியில் 2 மெகா சாதனை: 36 ஓவரில் நியூசிலாந்து வெற்றி!
உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 282/9 ரன்களை எடுத்தது. ரூட் 77 (86), பட்லர் 43 (42), பேர்ஸ்டோ 33 (35) ஆகியோர் மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர்களாக டிவோன் கான்வே, வில் யங் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், முதல் ஓவரில் கான்வே 10 ரன்களை அடிக்க, அடுத்த ஓவரின் முதல் பந்தில் சாம் கரன் வேகத்தில் வில் யங் 0 (1) கோல்டன் டக் ஆனார். இதனால், நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே கடும் பின்னடைவு ஏற்பட்டது.
இருப்பினும், இதனை டிவோன் கான்வே, மூன்றாவது இடத்தில் களமிறங்கிய பேட்டிங் ஆல்-ரவுண்டர் ராசின் ரவீந்திரா ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அதிரடியாக விளையாடவே முடிவுசெய்தனர்.
இங்கிலாந்து பௌலர்கள் எவ்வளவோ போராடியும் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. அனைத்து பௌலர்களையும் கான்வே, ராசின் ரவீந்திரா இருவரும் சிறப்பாக சமாளித்து, அதிரடியாக விளையாடினார்கள். இதனால், நியூசிலாந்து அணி 36.2 ஓவர்கள் முடிவில் 283/1 ரன்களை சேர்த்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
கான்வே 121 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 152 ரன்களை எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். ராசின் ரவீந்திரா 96 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 123 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கவில்லை.
ராசின் ரவீந்திரா இளம் வயதில், அதாவது 23 வயதில் நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் சதம் அடித்த வீரராக திகழ்கிறார். அதுமட்டுல்ல, கான்வே, ரவீந்திரா இருவரும் சேர்ந்து 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக இதுதான் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது.