சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில குற்றத் தடுப்புப் பிரிவு (சிஐடி) போலீஸாரால் கடந்த மாதம் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் அடைக்கப்பட்டாா்.
அவரது நீதிமன்றக் காவல் ஏற்கெனவே இருமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அமராவதியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சந்திரபாபு தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் சிஐடி மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 23, 24-ஆம் தேதிகளில் அவரை காவலில் எடுத்து சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.