அரசியல் யாப்பு மாற்றத்தினால் மாத்திரம் தீர்வை பெற முடியாது – அங்கஜன் இராமநாதன்

இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயம். வெறுமனே அரசியல்யாப்பு திருத்தங்கள் மூலம் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றம் சம்பந்தமான வீட்டுத் திட்டம் முடிவுறாத நிலையில் இருக்கின்றது அது தொடர்பாகவும், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டம் என்பன தொடர்பாகவும் யாழிற்கு வருகைதந்த கிராமிய, வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. மத்திய, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் தொடர்பாகவும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

19ஆவது அரசியல்யாப்பு திருத்தத்தினை மாற்ற வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த பொதுத் தேர்தலில் 19ஐ மாற்றுவதற்கே இந்த அரசிற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தந்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னோக்கிச் செல்லமுடியாமல் ஜனாதிபதியும் பிரதமரும் அதிகார ரீதியாக முரண்பட்டுக் கொண்டிருந்ததை கண்ணூடாக கண்டோம். அதனடிப்படையிலேயே அதற்கான மாற்றம் வேண்டும் என கூறுகின்றேன். அந்த மாற்றதிற்கான மக்கள் ஆணையை பெற்றே இவ் அரசு 20ஆம் திருத்தத்தை மேற்கொள்கின்றது.

திருத்தச் சட்டத்தினை யார் கொண்டுவந்தார்கள் என்பது முக்கியமில்லை. திருத்தச் சட்டத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே முக்கியமானது. அதற்காக பிரதமர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவ் வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சமூகத்துடன் இணைத்து அவர்களுக்கான விடிவை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.

எனக்கு கிடைத்த வாக்குகள் வேலை வாய்ப்பிற்காக கிடைத்ததென பலர் கூறுகின்றனர். இது தவறான விடயம். வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறேன். வேலையில்லாத இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி வேலையற்றவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நடந்தவண்னம் உள்ளது. அதனை சரிவர செய்வேன். வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்பு வடக்கு கிழக்கிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில ஊடகங்கள் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொய் கூறுகின்றன.

இங்கு பொருளாதார மத்திய நிலையம் இல்லாததாலேயே தம்புள்ளைக்கு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காகவே விவசாய அமைச்சர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இங்கிருந்தே விவசாய உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப கூடியதாகவும், இங்குள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாக சசீந்திர ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நீண்ட காலமாக இனப்பிரச்சினை நிலவி வருகிறது. இனப்பிரச்சினை தீர்கப்பட வேண்டிய ஒரு விடயம். வெறுமனே அரசியல்யாப்பு திருத்தங்கள் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது.
அரசியல்யாப்போடு இணைந்து விவசாயம், கடற்தொழில், வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை விடயங்களில் அபிவிருத்தி அடையும் போதே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெறமுடியும். அந்த விடயத்தில் தாம் அதிக அக்கறை கொண்டுள்ளேன், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.