பெண் துப்புரவு பணியாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
புதுச்சேரியில் பெண் துப்புரவு தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி அடுத்த அரியூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம், இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். வழக்கம் போல பணி முடிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்த நபர், கோவிந்தம்மாளை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கோவிந்தம்மாளின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சி மற்றும் பெண் தாக்கப்பட்ட ஆயுதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியாமல் போலீசார் குழம்பினர். பின்னர் ரோஜர் என்ற மோப்ப நாயை வரவழைத்து சம்பவ இடத்தில் இருந்த தடையங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில் பெண் துப்புரவு பணியாளரை கொலை செய்தது அவரது பக்கத்து வீட்டுக்காரரான பஞ்சமூர்த்தி என்பது தெரியவந்தது.
திருப்பூர் பணியன் கம்பெனியில் வேலை செய்து வந்த பஞ்சமூர்த்தி அவ்வப்போது மனைவியை பார்க்க புதுச்சேரிக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது வீட்டின் அருகே குப்பை கொட்டியதாக பஞ்சமூர்த்திக்கும் கோவிந்தம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சமூர்த்தி வீட்டில் இல்லாத போத அவரது மனைவிக்கும் கோவிந்தம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உனது குழந்தை கலைந்துவிடும் என கோவிந்தம்மாள் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பஞ்சமூர்த்தியின் மனைவி அவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு நடந்தவற்றை அழுதுக்கொண்டே கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் கோவிந்தம்மாளை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கோவிந்தம்மாள் வேலையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு கூட்டத்தில் ஒருவராக நின்று வேடிக்கை பார்த்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த வில்லியனூர் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.