அரசியல் தீர்வை வழங்க வேண்டும்! – ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் தாரக.
“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.”
இவ்வாறு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் முதலில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இனத்தின் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படும் நபர் அல்லர். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.
எனவே, ஜனாதிபதியின் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார் எனக் கூறுவது தவறாகும்.” – என்றார்.