விரைவில் தீர்வு காண பேச்சு நடத்தவுள்ளேன்! சர்வதேசத்தை நாட வேண்டிய தேவை இல்லை!! – ரணில் தெரிவிப்பு.
“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டிருந்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.
அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டன.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டது. அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற. அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும்.
உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.