உலகக் கோப்பை 2023: இந்தியா அபார வெற்றி.
உலகக் கோப்பை 2023 தொடரின், 5ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. சென்னையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஒரு பேட்டர் கூட அரை சதம் அடிக்கவில்லை. அந்த அளவுக்கு பவர் பிளேவில் பும்ரா, சிராஜும், மிடில் ஓவர்களில் ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவும் மிரட்டலாக பந்துவீசினார்கள். குறிப்பாக, 19 முதல் 32ஆவது ஓவர் வரை ஆஸ்திரேலிய அணியை பவுண்டரி அடிக்கவிடவில்லை. அஸ்வினை சமாளிக்க தயாராக வந்த ஆஸ்திரேலிய அணியை, ரவீந்திர ஜடேஜா துவம்சம் செய்தார்.
ஆஸ்திரேலிய அணியில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41 (52) ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 46 (71) ரன்களையும் அடித்தார்கள். மற்ற எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் முடிவில் 199/10 ரன்களை மட்டும் தான் எடுத்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் இஷான் கிஷன் 0 (1), ரோஹித் ஷர்மா 0 (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஷ்ரேயஸ் ஐயரும் 0 (3) டக்அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 2 ஓவர்கள் முடிவில் 2/3 என படுமோசமாக திணறியது. இதனைத் தொடர்ந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி 85 (116) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் 97 (115) ரன்களையும், ஹார்திக் 11 (8) ரன்களை சேர்த்திருந்தபோது, இந்திய அணி 41.2 ஓவர்கள் முடிவில் 201/4 ரன்களை குவித்து அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டிக்கு முன்புவரை நான்கு அணிகள் முதல் லீக்கில் வென்றுள்ளன. நியூசிலாந்து அணி (+2.149), தென்னாப்பிரிக்கா (+2.040), பாகிஸ்தான் (+1.620), வங்கதேசம் (+1.438) ஆகிய அணிகள் நெட்ரன் ரேட் அடிப்படையில் முதல் 4 இடத்தில் இருந்தன. இந்திய அணி +0.883 நெட் ரன்ரேட்டை பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது.