ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக நிறைவுற்றன. இந்தப் போட்டியில் இந்தியா 28 தங்கம் உட்பட 107 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வந்தன. கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று போட்டியை இந்தியா நிறைவு செய்துள்ளது.
அதேநேரத்தில், போட்டியை நடத்திய சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜப்பான் 52 தங்கம், 67 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 188 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பெற்றது. கொரியா 42 தங்கம், 59 வெள்ளி, 89 வெண்கலம் என மொத்தம் 190 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஹாங்சோவிலுள்ள ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.