கொழும்பு வருகின்றார் ஜெய்சங்கர்! – திருமலைக்கும் செல்வார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின்’ மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகின்றார். அவர் திருகோணமலைக்கும் செல்கின்றார். எனினும், தமிழ்க் கட்சிகளின் பிரதிதிகளை அவர் இம்முறை சந்திப்பாரா என்பது தெரியவரவில்லை.
மாநாடு நாளை புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று இரவு அல்லது நாளை முற்பகல் வேளையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.
மேற்படி இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் 2023 – 2025 காலப்பகுதிக்கான தலைமைப் பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுகின்றது.
கடந்த ஆண்டு மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் பின்புலத்தில் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள்’ மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இது சர்வதேச ரீதியில் பெரும் அவதானம் மிக்க மாநாடாக மாறியுள்ளது.
பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்புக்களை நடத்தவும் உள்ளார்.
அரசாங்கத்தின் சீன சார்பு கொள்கை காரணமாக இந்தியா சில அரசியல் நெருக்கடிகளை இலங்கைக்குக் கொடுத்து வருகின்றது.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ் நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலகம் அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கையில் ‘இந்து சமுத்திர எல்லை நாடுகள்’ மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, எஸ்.ஜெய்சங்கர் தமது இலங்கை விஜயத்தில் திருகோணமலைக்கும் செல்லவுள்ளார். அங்கு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள சில திட்டங்களை அவர் பயனாளிகளுக்கு கையளிக்கவுள்ளார்.
திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள ஏனையத் திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வுகளை நடத்துவார் என அறியமுடிகின்றது.