முதல்முறை’.. எந்த போட்டியிலும் நடக்காத.. 2 சம்பவங்கள்: பாகிஸ்தான் வரலாற்று வெற்றி!
உலகக் கோப்பை 8ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் மோதின. ஹைதராபாத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், ஓபனர் குஷல் பெரேரா 0 (4) டக்அவுட் ஆனதால், இலங்கை அணிக்கு துவக்கத்திலேயே பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், அதன்பிறகு பதும் நிஷங்கா, குஷல் மெண்டிஸ் இருவரும் மிரட்டலாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப்பை இலங்கை அணியால் பிரிக்கவே முடியவில்லை.
பதும் நிஷங்கா 51 (61) ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்துவிட்டார். அதன்பிறகு, குஷல் மெண்டிஸ் தொடர்ந்து காட்டடி அடிக்க ஆரம்பித்தார். இறுதியில், 65 பந்தில் சதம் அடித்து, இலங்கை அணிக்காக குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற மெகா சாதனையை படைத்தார். இறுதியில், 77 பந்துகளில் 14 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 122 ரன்களை குவித்து நடையைக் கட்டினார். இவர் விட்ட இடத்தில் இருந்து சமரவிக்ரமா தொடர ஆரம்பித்தார். இவரும் 89 பந்தில் 108 ரன்களை குவித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்த ஆரம்பித்தார்.
அடுத்து, யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. தனஞ்ஜெயா25 (34) ரன்களும், கேப்டன் ஷனகா 12 (18) ரன்களை மட்டும்தான் எடுத்தனர். இதனால், 370+ ரன்களுக்கு மேல் அடிக்க முடியாமல் போனது. இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 344/9 ரன்களை குவித்து அசத்தியது.
உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்த அணியில் 340+ ரன்களை சேஸ் செய்தது கிடையாது. இந்நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 12 (12), கேப்டன் பாபர் அசாமும் 10 (15) இருவரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சபிக் 113 (103) சதம் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, முகமது ரிஸ்வான் வெற்றிக்காக கடுமையாக போராடினார். அப்போது, ரிஸ்வானுக்கு தொடைப் பகுதியில் தசைபிடிப்பு இருந்தது. இருப்பினும், அவர் பெவிலியர் திரும்பாமல் தொடர்ந்து விளையாடி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் 134 (121) ரன்களை எடுத்தார். ரிஸ்வானுக்கு துணையாக சௌத் சஹீல் 31 (30) ரன்களும், இப்டிகார் அகமது 22 (10) ரன்களும் எடுத்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் முடிவில் 348/4 ரன்களை சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
உலகக் கோப்பை வரலாற்றில், ஒரு போட்டியில் 4 சதங்கள் பதிவானது கிடையாது. இன்றைய ஆட்டத்தில் இலங்கை தரப்பில் குஷல் மெண்டிஸ், சமரவிக்ரமா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் சபிக், முகமது ரிஸ்வான் ஆகியோர் சதம் அடித்து அசத்தினார்கள்.
உலகக் கோப்பை வரலாற்றில், இன்று சேஸ் செய்யப்பட்டதுதான் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.