மழை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீளவும் திறப்பு!
மழை காரணமாக மூடப்பட்டிருந்த காலி, மாத்தறை மாவட்டங்களின் பாடசாலைகள் மீண்டும் (11) திறக்கப்படவுள்ளன.
எனினும், வௌ்ளம் தொடர்ந்தும் தேங்கி நிற்கும் பாடசாலைகளைத் திறக்கின்றமை தொடர்பில் உரிய வலயக் கல்வி பணிப்பாளர்களே தீர்மானிப்பார்கள் என்று மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வெள்ளத்தால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான சீரற்ற காலநிலையால் காலி , மாத்தறை மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தன.
மாத்தறை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 403 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை , கடுவன்கொட , நாரங்கொட, தல்கஹகொட, துடாவ, பிலதுவ உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. சிலர் பாதுகாப்பு அணையில் கூடாரங்கள் அமைத்து இருந்துள்ளனர்.
பிலிதுவ, வல்பொல, தொடுபல பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. அக்குரஸ்ஸ, அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
மாத்தறை – நாவிமத, நாதுகல, வெஹரகம்பிட்டிய, கத்துவ, மாலிம்பட உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் வௌ்ளம் வடிந்தோடி வருகின்றது.
எனினும், கத்துவ வடக்கு, நாவிமத உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.
வெள்ளம் நிறைந்துள்ள பகுதிகளிலுள்ள மக்கள் மாத்தறை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல விகாரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.