டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு.. அரசு பேருந்துகள் இயங்குமா?
கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடக அரசு முறையாக திறக்காததால் பல ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா அரசை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறவுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே, போராட்டம் நடைபெறும் டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல அரசு பேருந்துகள் இயங்கும் என கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.