ரூ.10 லட்சம் மதிப்புள்ள பஸ் ஸ்டாப்பை திருடி சென்ற நபர்கள்..!
நகைச்சுவை நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், கிணற்றை காணவில்லை என்று புகார் தெரிவிப்பார். பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அது நகைச்சுவையாக தோன்றினாலும், நிஜத்திலும் கூட அதுபோன்ற சம்பவங்கள் அவ்வபோது நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், பெங்களூரு மாநகரின் கன்னிங்ஹாம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஒன்றை திடீரென்று காணவில்லை என்ற செய்திதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த பேருந்து நிறுத்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஸ்டீல் தூண்கள், மேற்கூரை, நாற்காலிகள், கம்பம் போன்றவற்றை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் துணைத் தலைவர் என்.ரவி ரெட்டி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அருகாமையில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தனைக்கும் இந்தப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்ட பகுதியானது, கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ளதாம். ஏற்கனவே அங்கிருந்த பழைய பேருந்து நிழற்குடையை சில மாதங்களுக்கு முன்பாக இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாக அதனை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.