யாழில் இளைஞரைத் தாக்கிக் கொள்ளை; மூன்று பெண்கள் உட்பட 6 பேர் மறியலில்!

இளைஞர் ஒருவரைத் தாக்கிப் பணம் உள்ளிட்ட 10 இலட்சம் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி சந்தேகநபர்கள் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு இளைஞர் ஒருவரை மறவன்புலவு பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு இளைஞரைத் தாக்கி அவரிடமிருந்த நான்கரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், கைக்கடிகாரம் உள்ளிட்ட 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களையும், அவரிடமிருந்த இருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தைச் சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நகைகளைக் கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்கத் தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் 6 சந்தேகநபர்களையும், சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தியபோது அவர்களை 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.