பிகாரில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து.. 4 பேர் பலி.. 60-க்கும் மேற்பட்டோர் காயம்
பிகார் மாநிலம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாதில் 4 பேர் உயிரிழந்தனர் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
பிகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு வடகிழக்கு அதிவிரைவு ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டன. டெல்லி ஆனந்த் விஹாரில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் சென்ற ரயில் இரவு 9.35 மணியளவில் டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ளூர் மக்கள் உதவியுடன் ரயில்வே போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டபடி ரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களை விடிய விடிய போராடி மீட்டு வருகின்றனர்.
ரயில் தடம்புரண்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவ குழுக்கள் அனுப்பட்டுள்ளதாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட செல்வதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.