இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் திட்டம்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்தம் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிணைக் கைதிகளை கொன்று விடுவதாக ஹமாஸ் விடுத்த எச்சரிக்கையை மீறி, இஸ்ரேல் அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது. இதில், ஹமாஸை சேர்ந்த நிதி அமைச்சர் உட்பட 2 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக அஷ்கெலோன் நகர் மீது ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர். இதனை IRON DOME தொழில்நுட்பம் மூலம், வானிலேயே இஸ்ரேல் அழித்த காணொளி வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், சுமார் 3,60,000 பேர் போர் களத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காஸா தரப்பிலும் சுமார் 1,000பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் நடந்த ரஷ்யா, உக்ரைன் போரின் போது இந்தியர்களை காப்பாற்றுவதற்காக அங்கு விமான சேவை தொடங்கப்பட்டிருந்தது. அதே போன்று தற்போதும் இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்க விமான சேவையை தொடங்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் நேற்று தெரிவித்தார். இதனடிப்படையில், இன்று விமான சேவையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது, இந்த திட்டத்திற்கு ஆபரேஷன் அஜய் என பெயரிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 18,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர், இந்தியா திரும்ப 2460 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரையும் அழைத்து வரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதல் விமானம் இன்று இரவு 11.30 மணிக்கு இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு திரும்பவிருப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.தேவைப்பட்டால் மீட்ப்பு பணிக்கு இந்திய விமானப்படை விமானங்களும் பயன்படுத்தப்படும் என்று வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.