கொழும்பை மையமாக, முழுநாட்டை பரப்பாக, கொண்டு தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம் உதயமாகிறது.
தமிழ் சமுதாயத்தில், எஞ்சியுள்ள இன்றைய மிகப்பெரிய பலம் கல்வி ஆகும் என்பதை எமக்கு என்றுமில்லாதவாறு உணர்த்தும் காலம் இதுவாகும். ஆகவே, தமிழர் கல்வி துறையை போற்றி பாதுகாத்து, பலவீனமான புள்ளிகளை அடையாளம் கண்டு, கூட்டிணைந்து நாம் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இந்நோக்கில், தமிழ் மாணவர்களின் முன்பள்ளி கல்வி முதல் மூன்றாம் நிலை கல்வி வரையிலான ஒட்டுமொத்த தமிழர் கல்வி கட்டமைப்பு எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்க இன்று நாம் அங்குரார்ப்பணம் செய்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம், கல்வியிலாளர் முன்னாள் அதிபர் நண்பர் ப. பரமேஸ்வரன் தலைமையில் முழு வீச்சுடன் செயற்படும் என நாம் திடமாக நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமிழர் கல்வி மேம்பாட்டு கழக அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள, தமிழர் கல்வி மேம்பாட்டு கழகத்தின் போசகராக மனோ கணேசனும், தலைவராக ப. பரமேஸ்வரனும், செயலாளராக திருமதி. கே. நிரஞ்சன் செயலாளராகவும், நிதி செயலாளராக எம். ஜெயப்பிரகாஷும் நியமிக்கப்பட்டார்கள். ஏனைய பதவிகளுக்கான நியமனங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. பேராசிரியர் டி. தனராஜ், தொழிட்நுட்ப அமைச்சு பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் மற்றும் கல்வியமைச்சின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி க. பத்மநாதன், தொழிட்நுட்ப கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. குருமூர்த்தி ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தேசிய, மாகாணசபை மற்றும் தனியார் கல்வி கட்டமைப்பில் தமிழர் கல்விக்கான சமத்துவ வாய்ப்புகள் இன்மை, ஆளணி, பெளதிக வளம், அதிபர் தராதரங்கள், விஞ்ஞான, கணித, ஆங்கில, தொழிட்நுட்பவியல் ஆகிய (STEM) பாடங்களுக்கான தமிழ் மொழி ஆசிரியர்களின் கடும் பற்றாக்குறை, தமிழ் மாணவர்களின் இடை விலகல், தொழிட்நுட்ப மற்றும் தொழில் கல்வி தொடர்புகளில் தமிழ் மாணவர்களின் ஆர்வமின்மை, மூன்றாம் நிலை கல்வி, மேற்கல்வி, இடைநிலை கல்வி மற்றும் தொழில் பயிற்சி ஆகியவற்றுக்கான பாடசாலை மட்டத்திலான கல்வி வழிகாட்டல் (Career Guidance), தமிழ் மொழியிலான முன்பள்ளி கல்வி, பொது கல்வித்துறை தரவுகளை சேகரித்தல், முறைப்பாடுகளை ஒருமுகப்படுத்தி தீர்வு தேடல் ஆகிய விடயங்களை, நாம் இன்றைய இந்த முதல் சந்திப்பிலேயே ஆராய ஆரம்பித்துள்ளமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்றது.
அதிபர் நண்பர் பரமேஸ்வரன் கல்வி வளர்ச்சித்துறைக்கு தகைமையானவர் என்ற காரணத்தாலேயே, சிலகாலமாக அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வந்தேன். நானும், அவரும் கலந்து பேசி கண்ட கனவு இன்று நனவாகின்றது. பரமேஸ்வரனுடன் நீங்கள் அனைவரும் ஒத்துழைக்கிறீர்கள். எமது நோக்கங்களை சிறப்பாக நண்பர் பரமேஸ்வரன் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்று இங்கே தவிர்க்க முடியாமல் வருகை தர முடியாத பேராசிரியர் மூக்கையா, பேராசிரியர் கலாநிதி. கணேசமூர்த்தி, பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் யோகராஜா, திரு எஸ். தில்லைநடராஜா உட்பட மிகப்பல கல்வியியலாளர்கள், ஆர்வலர்கள், தமது ஒத்துழைப்புகளை நல்குவதாக செய்தி அனுப்பியுள்ளனர். இவை எல்லாம் மகிழ்வையும், நம்பிக்கையையும் தருகின்றன.
தமிழர்களாகிய நாம் எமக்கிடையேயான தனிப்பட்ட முரண்பாடுகளை தள்ளி வைத்து விட்டு, எமது அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி பணியாற்ற வேண்டிய காலம் இதுவாகும். அந்த பணி வரிசையில் கல்விப்பணி, முதல் மூன்று, முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
நமது நாட்டு அரசாங்கம் செயற்படும் கொழும்பை மையமாக கொண்டு தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம் செயற்பட்டாலும், கழகத்தின் வீச்சு முழுநாட்டினதும் தமிழர் கல்வி கட்டமைப்பை தழுவியதாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆகவே இந்த கழக வலையமைப்பு இன்னமும் விரிவு படுத்தப்பட வேண்டும் என நான் முன்மொழிகிறேன். மக்கள் பிரதிநிதியாக எனது கவனத்துக்கு கொண்டுவரப்படும் கல்வி விவகாரங்களுக்கு பாராளுமன்றம், அமைச்சு கலந்துரையாடல்கள், மாகாணசபை, வலயம், கோட்டம் உள்ளிட்ட தேசிய, மாகாண கல்வி கட்டமைப்புகளின் ஊடாக தீர்வுகளை தேடித்தர நான் கடமைப்பட்டுள்ளேன்.