இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை அழைத்து வந்தது முதல் விமானம்..!
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் அஜய் திட்டம் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் ஆயுதக்குழு இடையே கடந்த 7ஆம் தேதி போர் தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெற்று வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இஸ்ரேலில் கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் என 18,000-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்காக, 24 மணி நேரமும் இயங்கும் புதிய கட்டுப்பாட்டு அறையும் இஸ்ரேலில் திறக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை பொறுத்தவரை 20 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உதவிகளுக்கு ரமல்லா தூதரக அலுவலகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரத்யேக அவசர உதவி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.ஆபரேசன் அஜய் என்ற பெயரில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள 2460 பேரை பல்வேறு விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானிகள், விமானப் பணியாளர்கள்,பொறியாளர்கள்,வல்லுநர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி17,ஐஎல் 76 உள்ளிட்ட விமானங்களும், சி130ஜே ரக விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. தேவை ஏற்படும்பட்சத்தில் இந்த வகை விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் வரும் 18ஆம் தேதி வரை விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாளம், சிறப்பு விமானம் மூலம் 253 மாணவர்களை மீட்டுள்ளது. இந்நிலையில் 212 பயணிகளுடன், இரவு 11.30 மணிக்கு டெல் அவிவ் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த 212 இந்தியர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “ இந்தியர்களை நமது அரசு பத்திரமாக மீட்டு அவர்களது வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். யாரையும் தனியே விட்டுவிட மாட்டோம். நமது பிரதமர் இதில் உறுதியுடன் இருக்கிறார்” என்றார்.