யாழில் குப்பைக்கு வைத்த தீ ஆடையில் பற்றி குடும்பப் பெண் மரணம்!

வீட்டில் குப்பை கொளுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்., சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 7ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்த குப்பையை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது. காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்குத் தீ மூட்டியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். கடைசிப் பிள்ளைக்கு 2 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசரணைகளை மேற்கொண்டு பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.