இஸ்ரேலிலிருந்து 235 இந்தியர்களுடன் டெல்லி வந்த 2-வது விமானம்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களுடன் 2வது விமானம் டெல்லி வந்தடைந்தது.
ஹமாஸ் – இஸ்ரேல் போரால், அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆப்ரேஷன் அஜய் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் முதற்கட்டமாக 212 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டு, நேற்று காலை அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, தங்களது சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களுடன் நேற்றிரவு 10.40 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது விமானம் இன்று காலை 7 மணியளவில் டெல்லி வந்தடைந்தது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் விமானத்தில் வந்த இந்தியர்களை வரவேற்றார். தொடர்ந்து, அனைவருக்கும் டெல்லியில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விமானத்தில் வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 29 பேரை, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வரவேற்றார். தொடர்ந்து, டெல்லி வந்த தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.