ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடனில் உள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்கள் மேலும் கடன் சுமையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த சூழலில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் அக்டோபர் மாத தவணை தொகை இன்றே வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட இருக்கிறது.
மாதந்தோறும் 15-ஆம் தேதிகளில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு நாள் முன்னதாகவே வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட இருக்கிறது.