மருத்துவ மாணவி தற்கொலை.. பேராசிரியர் அதிரடி கைது!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுகிர்தா சென்னை தனியார் கல்லூரியில் இளநிலை மருத்துவம் முடித்து, 2 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். ஆர்வத்துடன் படித்து வந்த மாணவி, கடந்த 6 ஆம் தேதி வகுப்பிற்கு செல்லாமல், அறை விடுதியிலே தங்கினார்.
இதனை அறிந்த சக மாணவிகள், விடுதி அறைக்கு சென்று பார்த்த போது, கதவு பூட்டப்பட்டு இருந்தது.பல முறை கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகம் அடைந்த மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.காவல்துறையின் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து பார்த்த போது, மாணவி சுகிர்தா சடலமாக கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்கொலைக்கு முன்பு சுகிர்தா எழுதிய கடிதம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. பேராசிரியர் பரமசிவம் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அதேபோன்று தனது துறையில் சீனியர் மாணவர்களான ப்ரீத்தி மற்றும் ஹரீஷ் ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார்.
அதன் அடிப்படையில் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் நேற்று பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் பரம சிவத்தை தக்கலையில் அமைந்துள்ள பத்மனாபபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்கு பின்பு நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே சீனியர் மாணவர்கள் பிரீத்தி மற்றும் ஹரீஷ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் முன்னதாக பரமசிவம் உட்பட சீனியர் மாணவர்கள் ப்ரீத்தி மற்றும் ஹரீஷ் ஆகியோரும் கல்லூரி நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.