இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை! – இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில.

“இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றும் இல்லை. இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள்தான் அரசியல் பிழைப்புக்காக இனப்பிரச்சினை நிலவுகின்றது என்றும், தீர்வு வேண்டும் என்றும் கூக்குரல் இடுகின்றனர். ஆனால், தமிழ் மக்கள் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.”
இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் எந்தவொரு இடமும் தமிழர்களுக்குச் சொந்தம் அல்ல. ஆனால், நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குச் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். இதனைச் சர்வதேச சமூகம் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது என்று செய்திகள் உலாவுகின்றன. இந்தப் பிரேரணைகள், தீர்மானங்கள் எதற்கு? நாட்டின் இறையாண்மையை மீறிய இப்படியான செயற்பாடுகள்தான் இலங்கையில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்; இன மோதலுக்கு வழிவகுக்கும்.
எனவே, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றும் வெளிநாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளின் சொல்லைக் கேட்டு வெளிநாடுகளும், சர்வதேச அமைப்புகளும் செயற்படக்கூடாது.” – என்றார்.