ஆப்கான் வெற்றி’..இங்கிலாந்துக்கு பின்னடைவு!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்றது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களை சேர்த்த நிலையில், இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
உலகக் கோப்பை 13ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284/10 ரன்களை குவித்தது. ஓபனர் குர்பஸ் 80 (57), மிடில் வரிசை பேட்டர் இக்ரம் அலிகில் 54 (66) இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர். மற்றவர்களில் யாரும் 30+ ஸ்கோரை அடிக்கவில்லை.
இப்ராஹிம் ஜோர்டன் 28 (48), முஜிப் உர் ரஹ்மான் 28 (16) இருவரும் ஓரளவுக்கு ரன்களை எடுத்தார்கள்.
பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் அடில் ரஷித், லிவிங்ஸ்டன், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினார்கள். ரஷித் 10 ஓவர்களில் 3/42 விக்கெட்களை கைப்பற்றினார். லிவிங்ஸ்டன் 1/33, ரூட் 1/19 ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.
டெல்லி பிட்ச் வழக்கமாக பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், இப்போட்டியில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால், இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக படுமோசமாக தடுமாறினார்கள். அதிகபட்சமாக ஹேரி ப்ரூக் 66 (61) மட்டும்தான் அரை சதம் அடித்தார். அடுத்து, டேவாட் மலானை 32 (39) யாரும் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை. பட்லர் 9 (18), லிவிங்ஸ்டன் 10 (14), ரூட் 11 (17) போன்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தனர். இதனால், இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் முடிவில் 215/10 ரன்களை மட்டும் சேர்த்து, 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 36 ஓவர்களில் 190/6 என இருந்தது. அடுத்து, டெய்ல் என்டர்ஸ் எனக் கருதப்படும் கடைசி 4 விக்கெட்கள் சேர்ந்து 94 ரன்களை அடித்திருக்கிறார்கள். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம்.
ஜோ ரூட்டையும் சரியாக பயன்படுத்தவில்லை. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டெய்ல் என்டர்ஸுக்கு எதிராக ஜோ ரூட்டிற்கு அதிக ஓவர்கள் கொடுத்திருக்கலாம். ஆனால், மொத்தமே அவருக்கு 4 ஓவர்களை தான் கொடுத்தார்கள். அதில், ரூட் 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். சுழலுக்கு சாதகமான பிட்சில், கடைசி நேரத்தில் சாம் கரனுக்கு ஓவர் கொடுக்கப்பட்ட நிலையில், அவர் ஒரு ஓவரில் 18 ரன்ளை வாரி கொடுத்தார். ரூட்டை சரியாக பயன்படுத்தாததும் தோல்விக்கு முக்கிய காரணம்.
ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பார்ட்னர்ஷிப்தான் மிகமிக முக்கியம். ஹேரி ப்ரூக்குடன் ஒருவர் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தாலே இங்கிலாந்து அணி வென்றிருக்கும். ஆனால், மற்ற பேட்டர்கள் சுழலை அதிரடியாக ஆடும் எண்ணத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.