திருமணத்துக்கு 10 கிராம் தங்கம், இலவச இணைய வசதி: தெலங்கான காங்கிரஸ்?

திருமணத்தின்போது தகுதிவாய்ந்த மணமகள்களுக்கு 10 கிராம் தங்கம், மாணவர்களுக்கு இலவச இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் அறிவிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி குழுவின் தலைவர் ஸ்ரீதர் பாபு கூறுகையில், கட்சியின் மகாலட்சுமி உறுதி திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகை அல்லாமல், கூடுதலாக இந்த தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
தற்போது தெலங்கானாவில் பெற்றோரின் வருமானம், மணமகளின் வயது உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளது.
இந்த நிலையில், புதிய தேர்தல் வாக்குறுதியில் மணமகளுக்கு 10 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளதாகவும், மாணவர்களுக்கு இலவச இணைய வசதி வழங்கவும் கட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.