‘எம்.ரி. நியூ டயமண்ட்’ கப்பல் மாலுமியை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு!
கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளான பனாமா நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.ரி. நியூ டயமண்ட்’ எண்ணெய்க் கப்பலின் மாலுமியைச் சந்தேகநபராகக் குறிப்பிட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
2008/35ஆம் இலக்க கடல் மாசடைவு தடுப்புச் சட்டத்தின் 25, 26, 38 மற்றும் 53ஆம் பிரிவுகளுக்கமைய சட்டமா அதிபரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலின் உரிமையாளர்களிடம் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குக் கடற்படையினர் மற்றும் கடற்பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்ட செலவீனங்களை ஈடுசெய்வதற்காக உரிமை கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைக்கவும் சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இதன்படி செலவீன தொகையான 340 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த கோரிக்கைக் கடிதத்தை கப்பல் உரிமையாளரின் சட்டத்தரணிகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.