சு.கவில் தயாசிறிக்குப் புதிய பதவி வழங்குமாறு கோரிக்கை!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வழங்குமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.
தயாசிறி ஜயசேகர கட்சியுடன் இணைந்து பயணிக்க முன்வருமானால் தவிசாளர், செயலாளர் ,தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளைத்தவிர ஏனைய எந்தவொரு பதவியையும் வழங்குவதற்கு தயார் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இதற்கமையவே சிரேஷ்ட உப தலைவர் பதவியை தயாசிறிக்கு வழங்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது சிரேஷ்ட உப தலைவர்களாக ஆறு பேர் செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தற்சமயம் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடு திரும்பிய பின்னரே அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி முடிவெடுப்பார் எனத் தெரியவருகின்றது. எனினும், சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறப்போவதில்லை என்ற உறுதியான அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.