பூரண ஹர்த்தாலுக்கு பேராதரவு தாருங்கள் – மட்டக்களப்பில் தமிழ்க் கட்சிகள் கோரிக்கை.
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் பூரண ஹர்த்தாலுக்கு வர்த்தக சங்கத்தினர், அரச ஊழியர்கள், போக்குவரத்துத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து மட்டக்களப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளரும் ரெலோ அமைப்பின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதித் தலைவர் நகுலேஸ் ஆகியோர் கலந்துகொண்டு மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால் இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். ஜனநாயக ஆட்சி இல்லாமல் 74 சதவீதமான சிங்கள மக்களின் இனவாத ஆட்சி நடைபெறுகின்றது. வடக்கு – கிழக்கில் தொல்லியல் திணைக்களம் என்ற பெயரில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், மாகாவலி திணைக்களம் ஊடாக பல்வேறுபட்ட ஆக்கிரமிப்புக்கள் வடக்கு – கிழக்கில் இடம்பெறுகின்றன.
எனவே, இதனைக் கண்டித்தும், வடக்கு – கிழக்கில் ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் மனித உரிமையையும் நீதிதுறையின் கௌரவத்தையும் பாதுகாப்பதற்காகவும் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் – கடையடைப்பு – பொது வேலைநிறுத்தத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்” – என்றனர்.