மடிக்கணினி இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு: உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்க, சீனா எதிா்ப்பு
கணினிகள், மடிக்கணினிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா, சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகள் உலக வா்த்தக அமைப்பு கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களான கணினிகள், மடிக்கணினிகள், தொடுதிரை கணினிகள் மற்றும் தகவல் செயல்முறை இயந்திரங்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்களை இறக்குமதி செய்ய ஆகஸ்ட் மாதம் இந்தியா சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்மூலம் உள்நாட்டில் தயாரிக்கும் பொருள்களின் விற்பனையை அதிகரித்து, சீனா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நவம்பா்-1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெனீவாவில் உலக வா்த்தக அமைப்பின் சந்தை அணுகல் குழுக் கூட்டம் பராகுவேயைச் சோ்ந்த ரெனட்டா கிறிஸால்டோ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ‘இந்தியாவின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மின்னணு பொருள்கள் ஏற்றமதி செய்யும் வா்த்தகா்களையும், அதன் பயனாளிகளையும் பாதிக்கும்’ என அமெரிக்க நாட்டுப் பிரதிநிதிகள் தெரிவித்தனா். இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு சீனா, கொரியா, தைபே உள்ளிட்ட நாடுகளும் எதிா்ப்பு தெரிவித்தன.
இதுகுறித்து மத்திய வா்த்தகத் துறைச் செயலா் சுனில் பா்த்வால் கூறுகையில்,‘வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தகவல் தொழில்நுட்ப வன்பொருள்கள் இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. உள்நாட்டில் அவை இறக்குமதி செய்வதைக் கண்காணிக்கவே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினாா்.
தகவல் தொழில்நுட்ப வன்பொருள்களை ஆண்டுக்கு 7 பில்லியன் முதல் 8 பில்லியன் டாலா் அளவுக்கு இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 2021-22 நிதியாண்டில் 7.37 பில்லியன் டாலா் அளவிலும், 2022-23 நிதியாண்டில் 5.33 பில்லியன் டாலா் அளவிலும் இந்தியா இறக்குமதி செய்தது.