2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் – விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ககன்யான் திட்ட பரிசீலனை கூட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
2040ஆம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புவதை இலக்காகக் கொள்ளுமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்1 பயணங்களின் வெற்றியை தொடர்ந்து ககன்யான் திட்டத்தின் சோதனை வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில்,ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வுகளின் அடுத்தக்கட்ட நகர்வு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர். அப்போது ககன்யான் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, 2035-க்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்றும் வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாயில் லேண்டரை இறக்குவது என கோள்களுக்கு இடையேயான பயணங்களை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.