இந்தியாவில் மாரடைப்பாலேயே ‘அங்கொட லொக்கா’ உயிரிழப்பு – பரிசோதனை மூலம் உறுதி
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியான ‘அங்கொட லொக்கா’ என அழைக்கப்படும் லசந்த சந்தன பெரேரா, இந்தியாவின் கோயம்புத்தூரில் மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராசாயனப் பரிசோதனை மூலம், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டு மரணமடைந்தமைக்கான எவ்வித சாட்சியமும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது என்று ‘ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் எவ்வித விஷமும் உடலில் செலுத்தப்பட்டிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கே. சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கோயம்புத்தூரில் வாடகை வீடொன்றில் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்த அமானி தன்ஜி எனும் இலங்கை பெண்ணின் ஆரம்பகட்ட வாக்குமூலத்துக்கு அமைய, ஜூலை 03ஆம் திகதி இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் இருவரின் உதவியுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயினும், ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான அங்கொட லொக்கா, பிரதீப் சிங் எனும் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்குச் தப்பிச் சென்று, இரு வருடங்கள் அங்கு வசித்து வந்துள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் அவரது காதலி எனத் தெரிவிக்கப்படும் அமானி தன்ஜி, மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் இந்தியப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.