புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிழைத்தார் பிள்ளையான்! – இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்.

“பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ள குழுதான்.”
இவ்வாறு இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் ‘திரிப்போலி’ என்ற கொலைக் கும்பல். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது.” – என்றார்.
‘நீங்கள் புலனாய்வு அதிகாரி என்பதை எப்படி நம்புவது?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை அவர் அந்தச் சிங்கள ஊடகத்துக்குக் காண்பித்தார்.