பஸ்ஸில் பயணித்த குடும்பஸ்தர் பஸ்ஸிலேயே மரணம்!

ஹட்டனிலிருந்து பஸ்ஸில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பிய போடைஸ் பஸ்ஸில் பயணித்த திக்ஓய – பட்டலகல பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த சில மாதங்களாகத் தொற்றா நோய் ஒன்றுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் (19) வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு நேற்று (20) வீடு திரும்பும்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் பஸ்ஸிலிருந்து இறங்காமல் இருப்பதால் சந்தேகமடைந்த பயணிகள், சாரதி மற்றும் நடத்துநருக்கு அறிவித்துள்ளனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஹட்டன் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய உயிரிழந்தவரின் சடலம் அதே பஸ்ஸில் கிளங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.