மரக்கன்றுகளை நட்டு பெண் குழந்தைகளை கொண்டாடும் கிராமம்
உலகெங்கிலும் பாலின சமத்துவதை நிலைநாட்டுவதற்கு சட்ட ரீதியாக பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பெண் சிசு கொலை என்பது அதிக அளவில் நடைபெற்று வந்தது. அதற்குப் பிறகு, பெண் குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் வகையிலும், பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்வோரை ஊக்குவிக்கும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக இன்றைக்கு இளம் தலைமுறையின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனினும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள் போன்ற நிகழ்வுகள் தற்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்த கொடூரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை கொண்டாடுகிறது என்ற தகவல் பாராட்டும்படியாக அமைந்துள்ளது.
தெற்கு ராஜஸ்தான் பகுதியில் உள்ள ராஜசம்நாத் என்ற பகுதிக்கு அருகே உள்ள பிப்லாந்திரி என்ற கிராமத்தில் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கின்றனர். பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த கிராம மக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும், 111 மரக்கன்றுகளை பொதுமக்கள் நடவு செய்கின்றனர். குழந்தைகளைப் போலவே மரக்கன்றுகளும் வளர்ந்து வரும் நிலையில், குழந்தைகள் பெரியவர்களானதும் அந்த மரங்களில் இருந்து பழங்களும், இதர பலன்களும் கிடைக்கும் என்று கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வங்கியில் டெப்பாசிட் :
பெண் குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையின் பெற்றோர் ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட வேண்டுமாம். அதேபோல, கிராம மக்களின் பங்களிப்பாக ரூ.11 ஆயிரம் கொடுத்து விடுவார்களாம். ஆக, மொத்தம் ஒரு பெண் குழந்தையின் பெயரில் ரூ.21,000 வங்கியில் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படுகிறதாம். குழந்தைக்கு 20 வயதாகும்போது இந்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் தடுப்பு :
பெண் குழந்தைக்கு, திருமண வயதுக்கு தேவையான வயது வரும் முன்பாக, குழந்தை திருமணம் செய்து வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தொடர்புடைய பெற்றோரிடம் கிராம மக்கள் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்து பெறுகிறார்களாம். அந்தக் குழந்தைக்கு முறையான கல்வி கற்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ஷியாம் சுந்தர் பாலிவால் என்பவரின் மகள் கிரான் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அந்தக் குழந்தையின் நினைவாக பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் திட்டத்தை அவர் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கினார். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமாக ஒட்டுமொத்த கிராமும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது.