இலங்கை நடன அரசி , ரஜினி செல்வநாயம் மறைந்தார்
மறைந்த கலாகீர்த்தி ரஜினி செல்வநாயகத்தின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை (25) மாலை பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமான நடனக் கலைஞரான ரஜினி செல்வநாயகம் கடந்த 20ஆம் திகதி இரவு காலமானார்.
நேற்று (22) மற்றும் இன்று (23) பொரளை ஜயரத்ன மலர் மண்டபத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய் (24) மற்றும் புதன்கிழமை (25) அவர் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திய கொலன்னாவ மாநகர சபைக்கு முன்பாக உள்ள சாமர கலா நிகேதனில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
புதன்கிழமை அங்கு நடைபெறவுள்ள சமய கிரிகைகளின் பின்னர், அவரது உடல் தகனம் செய்வதற்காக பொரளை மயானத்திற்கு கொண்டு வரப்படும்.
மூத்த நடன ஆசிரியை , விஸ்வகலா கீர்த்தி, ரஜினி செல்வநாயகம் 71வது வயதில் காலமானார்.
ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்த ரஜினி செல்வநாயகம் சுமார் ஆறரை வருடங்களாக நுரையீரல் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார்.
இவர் உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ‘நாட்டிய அரசி ‘ என அழைக்கப்பட்டார்.
இந்த நாட்டில் சன்ன – உபுலி மற்றும் தற்கால நடனக் கலைஞர்களின் முதல் ஆசிரியை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி செல்வநாயகம் அவர்களுக்கு ‘கலா கீர்த்தி’ மற்றும் ‘விஸ்வ கலா கீர்த்தி’ விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இலங்கையின் நாட்டியக் கலாச்சாரத்தை உலகம் முன் பிரகாசிக்க ஆரம்பித்து ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்களை உருவாக்கியவராவார்.
சிலாபம் மாதம்பை சேனாநாயக்க தேசிய பாடசாலையில் நடன ஆசிரியையாக தனது முதல் நடன நியமனத்தை பெற்றார்.
நாட்டியக் கலையின் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்களை மேம்படுத்தி நியாயமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் 1975ஆம் ஆண்டு சிறிய வகுப்பறையாக ஆரம்பிக்கப்பட்ட ‘சாமர’ கலையாதனத்தில் பல மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தத் தொடங்கினார்.
அதன்பிறகு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உட்பட பல்வேறு பின்னணியைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கூட வசூலிக்காமல் கற்பித்தார்.
இலங்கையில் நடைபெற்ற பல நடனப் போட்டிகளில் நடுவராகப் பங்குபற்றிய இவர் திறமையான பல இளம் மாணவர்களுக்கு தனது நேரத்தையும் வழிகாட்டலையும் வழங்கியுள்ளார்.
2016 இல் நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருந்தும் கூட, அவர் இறக்கும் வரை அவரது கலை பயணத்தை கைவிடவில்லை.
அன்னாருக்கு எமது அஞ்சலிகள்!