நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

நடிகை கவுதமியின் புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை கவுதமி
நடிகை கவுதமி இன்று காலை பாஜகவில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில் “தனது மொத்த சொத்துக்களையும் ஏமாற்றி அபகரித்த பாஜக பிரமுகருக்கு, கட்சியின் முக்கிய தலைவர் ஆதரவாக இருப்பதால், பாஜகவில் இருந்து விலகுகிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த 37 வருடங்களாக திரைத்துறையில் உழைத்து சேர்த்த மொத்த சொத்துக்களையும், பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவர் மோசடி செய்து ஏமாற்றி விட்டார். இந்த விஷயத்தில் தற்போது வரை எனக்கு ஆதரவு தராமல், என்ன ஏமாற்றி தலைமறைவாகி உள்ள அழகப்பனுக்கே பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஆதரவாக உள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு
அழகப்பன் தன்னை ஏமாற்றியது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். தற்போது தமிழக முதலமைச்சர், காவல் துறை மற்றும் நீதித்துறை மீது மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கவுதமியின் புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகப்பன் உட்பட அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.