பிக் பாஸ் – 7 விஜய்யை வீட்டுக்கு அனுப்பிய மக்கள்.
தான் செய்யும் மட்டரகமான நகைச்சுவையைப் பற்றி சுரேஷிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. வெளியே அப்படிப் பேசி பேசி, முதிராத இளைஞர்களிடம் கைத்தட்டல் வாங்கி அதன் மூலம் புகழ் பெற்றுவிட்டதால் அதையே இங்கும் தொடரலாம் என்று நினைக்கிறார்.
வினுஷாவின் தலைக்கு மேலே வந்த கத்தி யூடர்ன் எடுத்து விஜய்யின் மீது பாய்ந்தது. ஏற்கெனவே ஸ்ட்ரைக் கார்டு வாங்கிய நிலையில், மீண்டும் அவர் விளையாட்டில் ஆக்ரோஷத்தோடு செயல்பட்டதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை என்பது போல் தெரிகிறது. எனவே குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். மேலும் முதல் வாரத்தில் விஜய்யிடம் தென்பட்ட சுறுசுறுப்பு பிறகு அப்படியே காணாமல் போய் விட்டது. எங்குமே அவர் தென்படவில்லை. “வன்முறை கூடாதுன்னுதான் நான் சொன்னேன். ஆனா நீங்க அப்படியே செயலிழந்து நின்னுட்டீங்க” என்று கமல் சுட்டிக்காட்டியது சரியான காரணம்.
விஜய்யின் வன்முறையைப் போலவே சுரேஷின் எரிச்சலூட்டும் காமெடியையும் கமல் கண்டித்தது நல்ல விஷயம். வெளியே தியேட்டர் வாசல்களிலும் திரைப்பட பிரமோஷன் கூட்டங்களிலும் செய்த அதே கொனஷ்டைகளை வீட்டுக்குள்ளும் செய்தால் மக்கள் ரசிப்பார்கள் என்று அவர் தப்புக் கணக்கு போட்டிருக்கிறார். மட்டரகமான நகைச்சுவையை பொது சமூகம் எப்போதுமே ரசிப்பதில்லை. சுரேஷிற்குள் ஆதாரமான நகைச்சுவையுணர்வு இருக்கிறது. அதை அவர் தரமான முறையில் வளர்த்துக் கொண்டால் மிளிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
“உங்களுக்கு ஒரு ஸ்ட்ரைக் கார்டு வெச்சிருக்கேன்” என்று பார்வையாளர்களுக்கு ஜெர்க் தந்தபடி அரங்கத்திற்குள் நுழைந்தார் கமல். “இளைஞர்கள் கூட மாரடைப்பு காரணமாக இறந்து விடும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. 30, 40 வயசுலேயே ஹார்ட் அட்டாக் வருது. சரியான உறக்கமின்மை, தவறான உணவுப்பழக்கம், செயலின்மையோடு இருப்பது போன்றவைதான் இதற்குக் காரணம். கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் அதை ஆடுவதில் இல்லை. ஆக்ட்டிவிட்டியே சுத்தமாக இல்லை. Couch Potato-ன்னு சொல்லுவாங்க. அப்படியே சேர்ல உக்காந்திருக்கிறது. பக்கத்து கடைக்கு கூட பல்சர் பைக்ல போறது… இதையெல்லாம் தவிருங்கள். ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ன்னு பாரதியார் பாடியிருக்கார். இந்தியாவின் முக்கியமான பலம் அதனோட மனிதவளம். அதை நாம காப்பாத்திக்கணும்” என்று ஒரு தனிநபரின் அடிப்படையான ஆரோக்கிய அவசியத்தை உபதேசம் செய்தபடி அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்தார்.
‘ஐ ஆம் வாட்ச்சிங் யூ’ – போட்டியாளர்களுக்கு கமல் தந்த வார்னிங்
‘வாழ்த்துகள் பூர்ணிமா’ என்று எடுத்த எடுப்பிலேயே கமல் வாழ்த்தவும், ‘கேப்டன் ஆனதற்கான வாழ்த்து போல’ என்று நினைத்து மகிழ்ந்தார் பூர்ணிமா. இல்லையாம். ‘நீங்க SAVED’ என்று ஆரம்பத்திலேயே அவருக்கு ஆனந்த அதிர்ச்சியைத் தந்தார் கமல். நிறைய நபர்களைக் காப்பாற்ற வேண்டியிருப்பதால் சுண்டல் மாதிரி இதை நிகழ்ச்சியெங்கும் தூவிக் கொண்டே சென்றார் கமல்.
“எனக்குக் கேட்காது… நான் பார்க்க மாட்டேன்… இதைப் பத்தி இவரு விசாரிக்க மாட்டாருன்னு எதையுமே நினைக்காதீங்க… நான் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கேன்… சில விஷயங்களை நான் ஏன் கேட்கறதில்லைன்னா… நீங்களா முன்வந்து அதைப் பத்தி பேசறீங்களான்னு பார்க்கத்தான். உரிமைக்குரல்-ன்ற பேர்ல ஒரு சிவப்புத்துணி கொடுத்தேன். அதை முதுகு துடைக்கத்தான் யூஸ் பண்றீங்க போல. யாருமே இதுவரை பயன்படுத்தலை” என்று அதிரடியாக தனது விசாரணையைத் தொடங்கிய கமல், “என்ன மாயா… கண்ணு வேணும்னு கேட்டீங்களாமே… இப்ப கேளுங்க” என்று கேட்க வீட்டிற்குள் ஆயிரம் ரவுடித்தனங்களைச் செய்கிற மாயா, இப்போது ‘கைப்புள்ள’ போல அப்படியே பம்மி, “நெறய இருக்கு சார்… ஆனா…” என்று இழுத்தார்.
தானே முன்வந்து வழக்கை விசாரிக்க ஆரம்பித்த கமல், சுரேஷ் செய்யும் உருவக்கேலியைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டார். “ஆமாம் சார்… அப்படித்தான் பண்றாரு… வார்னிங் தந்தாலும் மன்னிப்பு கேட்டுட்டு திரும்புவும் அதையே பண்றாரு… ஜாலியா நெனச்சு பண்ணிட்டேன்னு சொல்றாரு… எதையாவது கேட்டா கத்த ஆரம்பிச்சிடறாரு! படத்துல மட்டும் வருதேன்னு நியாயம் கற்பிக்கறாரு…” என்று வரிசையாக மக்கள் புகார் தெரிவித்தனர். “கமல்ஜி… இங்க பாருங்க… ஒரேயோரு முறைதான் ஆயில் இல்லாத சப்பாத்தி கேட்டேன். என் ஹெல்த் இஷ்யூவைக் கூட சுரேஷ்ஜி காமெடி பண்றாரு” என்றார் அக்ஷயா.
தான் செய்யும் மட்டரகமான நகைச்சுவையைப் பற்றி சுரேஷிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. வெளியே அப்படிப் பேசி பேசி, முதிராத இளைஞர்களிடம் கைத்தட்டல் வாங்கி அதன் மூலம் புகழ் பெற்றுவிட்டதால் அதையே இங்கும் தொடரலாம் என்று நினைக்கிறார். மக்களும் அதைத்தான் விரும்புவார்கள் என்று தப்புக் கணக்குப் போடுகிறார். யாரையாவது எல்லை மீறி கிண்டல் செய்து அது கண்டிக்கப்பட்டால் உடனே மன்னிப்பு கேட்டு விடுகிறார். ‘தமிழன்டா’ என்று ஹைடெசிபலில் கத்தி ஆட்சேபங்களைச் சமாளிக்க முயல்கிறார். ஆனால் மீண்டும் அதையே செய்து கைத்தட்டல் வாங்க நினைக்கிறார். தரமற்ற நகைச்சுவையை ரசித்து சிரிப்பவர்களிடம் மட்டும்தான் சுரேஷ் போன்றவர்கள் வரவேற்பு பெற முடியும்.
“மத்தவங்க செலவுல காமெடி பண்ணக்கூடாது. எல்லோரையும் சிரிக்க வெக்கறதுதான் நல்ல காமெடியா இருக்க முடியும். நகைச்சுவைல சாதிச்சவங்க செய்தது அதைத்தான். ‘எங்க வீட்டுல பார்த்துட்டு இருப்பாங்க’ன்னு சில இடத்துல கண் கலங்கறீங்க… அதையேதான் நானும் சொல்றேன். ‘இது என் வீடு… இங்க தவறான விஷயங்கள் நடக்கறதை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன். படத்துல கூட உருவக்கேலி இப்பல்லாம் பண்ண முடியாது. நெறய விஷயங்கள் மாறிட்டு வருது. தரமில்லாத காமெடியை மக்கள் ரசிக்க மாட்டாங்க. இன்னிய தேதில பெற்றோர்களே குழந்தைகளைத் திட்ட முடியாது” என்றெல்லாம் கமல் நீண்ட நேரத்திற்கு லெக்சர் தந்தாலும் கடைசியில், “நிக்சன் என்னோட தலையைக் கிண்டல் பண்ணான் சார்” என்று ஸ்கூல் பிள்ளை போலப் புகார் சொன்னார் சுரேஷ். பிறகு பாவனையாக ‘இனிமே மாத்திக்கறேன்’ என்று கண் கசிந்தார்.
‘கதைல சோகம் இருக்கலாம். ஆனா சுவாரஸ்யமா சொல்லணும்’
“விசித்ரா. நீங்க SAVED” என்ற கமல் பிரேக்கில் சென்று திரும்பியதும், “கடந்து வந்த பாதைன்னு ஒரு டாஸ்க். அதுல ஏன் யாரும் பஸ்ஸர் அடிக்கலை?” என்கிற அடுத்த விசாரணையை ஆரம்பித்தார். கடந்த சீசனில், யாருடைய கதையாவது சலிப்பு ஏற்படுத்த ஆரம்பித்தால் உடனே பாய்ந்து பஸ்ஸரை அடித்து பேச்சை நிறுத்தினார்கள். இந்த முறை ஒருவர் கூட அதைச் செய்யவில்லை. உண்மையான துக்கத்தைப் புரிந்து கொள்வது என்பது வேறு. ஆனால் கவன ஈர்ப்பிற்காக செய்யப்படும் செயற்கையான சோகத்தின் நடிப்பை மக்கள் விரும்ப மாட்டார்கள். அத்தகைய போலித்தனங்களை ஆதரிக்கவும் கூடாது.
‘போர் அடிக்கற கதைக்கு பஸ்ஸர் அடிக்கணும்னு நெனச்சேன். உள்ள தோணுச்சு சார்… ஆனா அடிக்கலை’ என்பதையே விதம் விதமான காரணங்களுடன் போட்டியாளர்கள் சொன்னார்கள். “ஓகே… இதுல என் கருத்தைச் சொல்றேன்… உங்களைப் பத்தி மக்கள் தெரிஞ்சுக்க இதுவொரு நல்ல வாய்ப்பு. சபைக்கு ஏத்த மாதிரி கதையைச் சொல்லணும். கஷ்டமும் அழுகையும் மட்டுமே ஒருத்தரோட கதை இல்ல. சுவாரஸ்யமாகவும் சொல்லலாம். நீங்க எந்தவொரு முன் தயாரிப்புமே இல்லாம இருக்கீங்க… ‘யாருக்கு தடைக்கல் தரலாம்ன்னு’ கேட்டப்ப, அப்பதான் யோசிச்சு சுத்தும் முத்தும் பார்க்கறீங்க.. .கேம்ல இன்வால்மென்ட்டே இல்ல. இந்த அசிரத்தை குறித்து பிக் பாஸூம் உங்களுக்கு வார்னிங் தந்திருக்காரு. உங்களை வெளிப்படுத்திக் கொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பு. சரியா பயன்படுத்திக்கங்க” என்று ஒவ்வொரு சீசனிலும் சொல்கிற அதே உபதேசத்தை மீண்டும் நிகழ்த்தினார் கமல்.
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல், “ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்ல யாராவது ஆக்ரோஷமா விளையாடினாங்களா?” என்று அடுத்த விசாரணையை ஆரம்பித்தார். ‘ஒவ்வொன்னையும் நானேதான் கேட்கணுமா… நீங்களா எதையாவது சொல்லித் தொலைங்களேன்’ என்கிற சலிப்பு அவரிடம் தென்பட்டது. இந்த விவகாரத்தில் குறும்படம் ஏதாவது தேறுமா என்று எதிர்பார்த்தால் அப்படியொரு சுவாரஸ்யமும் நிகழவில்லை.
“நாங்க டிஃபன்ஸிவ்வா ஆடணும்னு முதல்லயே முடிவு பண்ணிட்டோம். ஆனா அவங்க ஆடினது ஆக்ரோஷமா இருந்தது” என்று விளக்கம் தர ஆரம்பித்தார் விஷ்ணு. ‘இந்த விஜய் கழுத்தாம்பட்டையிலேயே அடிச்சான் சார்’ என்பது அவர் ஊமைக்குத்தாக வெளியே சொல்லாத மைண்ட் வாய்ஸ். “இவங்களுக்கு பிளாக்கிற்கும் லாக்கிற்கும் வித்தியாசமே தெரியலை சார்” என்று மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் போல தன் தரப்பு விளக்கத்தை அளித்தார் விஜய். “என்னையேதான் ஃபோகஸ் பண்ணாங்க. அடியும் வாங்கினேன். பிடியும் வாங்கினேன்” என்று அடுத்த வரியில் கவிதை மாஸ்டராக மாறினார்.
“சிலிண்டர் எடுக்க விடாம தடுக்கறதுக்கு பூர்ணிமாவை பிடிச்சு இழுத்தேன். ஆனா அவங்க வேணும்ன்ட்டே ரவீனாவை கீழே தள்ளினாங்க” என்கிற பழைய புகாரை மீண்டும் பாடினார் மணி. “அவருதான் என்னைத் தள்ளினாரு. நான் ஒரு சப்போர்ட்டுக்கு ரவீனாவை பிடிச்சேன்” என்று ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ பாணியில் விளக்கம் தந்தார் பூர்ணிமா. “தேவையில்லாத அக்ரஷன் காட்டினாங்க… சிலிண்டர்கள் எடுத்துட்டுப் போனப்புறமும் இவங்க காலி சிலிண்டர்கள் மாதிரி ஒண்ணா உருண்டுட்டு கெடந்தாங்க” என்று ஜோவிகா சொன்னதை நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் கமல். “தேவையில்லாம அப்படிக் கட்டி உருளலை. எங்களுக்கென்ன ஆசையா? எங்க ஆளுங்க சிலிண்டர் எடுத்துட்டுப் போறதை இவங்க போய் பிடுங்கக்கூடாதுன்னுதான் அப்படி தடுத்து நிறுத்தினது” என்று பூர்ணிமா அளித்த லாஜிக்கை தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டார் கமல்.
“கண்ணாடி அடிபட்டு காயம் பட்டாலும் இன்னொருத்தரால தள்ளி விடப்பட்டு கீழே விழுந்தாலும் அதை உடனே ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்ட பிரதீப்பை நான் பாராட்டுகிறேன்” என்று தனியாகக் குறிப்பிட்டு கமல் சொன்னதும் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் வந்தது. மகிழ்ச்சியுடன் கைகூப்பி நன்றி சொன்னார் பிரதீப். “ஒரு தவறு நடந்தா ரெண்டு நாள் கழிச்சு புகார் சொல்லாதீங்க. உடனே தட்டிக் கேளுங்க… விளையாட்டுல தனிநபர் கோபம் இருக்கக்கூடாது. அப்படி நடந்தா விளையாட்டை உடனே நிறுத்திடுங்க. அதான் ஆரோக்கியமான விளையாட்டு” என்று சொல்லி பிரேக்கில் சென்றார் கமல்.
போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்ட தகவல்களை ஆயுதபூஜை பொரி கடலை போல வரிசையாக வாரி வழங்கி விட்ட பிறகு மீதமிருந்தவர்கள் வினுஷா மற்றும் விஜய். இதில் வினுஷாதான் வெளியேறுவார் என்று சக போட்டியாளர்கள் உறுதியாக நம்பி அதையே பொதுவில் பதிவு செய்தார்கள். ஆனால் ரவீனா மட்டும் ‘விஜய் போலாம்ன்னு நெனக்கறேன்’ என்று சரியாக யூகித்தார். ‘ஏன்?’ என்று கமல் காரணம் கேட்ட போது ‘இந்த பிக் பாஸ்ல இப்படித்தானே ராவடி பண்ணுவாங்க… மக்கள் ஒண்ணை எதிர்பார்க்கும் போது கோக்குமாக்கா இன்னொன்னு செய்யறதுதானே இவங்க வழக்கம்?’ என்பது போல் ரவீனா சொன்னதுதான் பிறகு உண்மையானது. தான் தப்பித்து விடுவோம் என்று வினுஷாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
விஜய் எலிமினேஷன் – எஸ்கேப் ஆன வினுஷா
எவிக்ஷன் சஸ்பென்ஸைப் போதுமான அளவிற்கு இழுத்த பிறகு ஒருவழியாக கார்டைக் காட்டினார் கமல். அதில் ‘விஜய்’ என்றிருந்த பெயரைப் பார்த்ததும் பலருக்கும் அதிர்ச்சி. மாயாவிற்கு கூடுதல் அதிர்ச்சி. ஓவென்று கூவி வாயைப் பொத்திக் கொண்டார். எவ்வித சலனமும் இல்லாமல் எழுந்து விடைபெறத் தொடங்கினார் விஜய். ‘ஒருவேளை சீக்ரெட் ரூம்ல உக்கார வெச்சு சிகரெட் தரலாம்’ என்று விஷ்ணு ஆறுதல் சொல்ல, “நான் கேக்காமயே டிரஸ்லாம் தருவான்… நல்ல மனுஷன்” என்று கண்கலங்கினார் சுரேஷ்.
“ஏன் திடீர்னு டல்லாயிட்டே… அப்ப அதானே ஜெஸ்ஸி?” என்று பூர்ணிமாவும் விஷ்ணுவும் இணைந்து மாயாவை ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். ‘எனக்கிருந்த ஒரே நண்பன் வெளியே போயிட்டான்’ என்று சோகத்தை மறைத்துக் கொண்டு ஒட்ட வைக்கப்பட்ட புன்னகையுடன் சொன்னார் மாயா. (இந்த ரவுடி பேபிக்குள்ளயும் ஒரு அழகான பூ பூத்திருக்குப். பாருங்களேன்!).
மேடைக்கு வந்த விஜய், “நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். எதை கத்துக்க கூடாதுன்றதையும் தெரிஞ்சுக்கிட்டேன். நான் அக்ரஸிவா இருந்ததை மக்கள் விரும்பலைன்னு தோணுது” என்று சுயபரிசீலனையுடன் பேசியது நன்று. பிறகு அகம் டிவி வழியாக சக போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் விஜய் வழங்கிய அறிவுரை சிறப்பானது. (அதென்னமோ, எல்லோருக்குமே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே மூளை நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுது!). “இப்பத்தான் தெளிவா பேசறீங்க… இதே மாதிரி வெளிலயும் இருங்க” என்று சொல்லி அவரை வாழ்த்தியனுப்பிய கமல், தானும் விடைபெற்றுக் கொண்டார்.
‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ என்பது மாதிரி புதிய கேப்டனாக ஆகியிருக்கும் பூர்ணிமா, சின்ன வீட்டுக்குச் செல்ல வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். போர்டில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களைப் பொருத்தி சம்பந்தப்பட்டவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த நோக்கில் பூர்ணிமாவின் தேர்வுப் பட்டியல் இவ்வாறாக அமைந்தது. மணி, யுகேந்திரன், ஜோவிகா, நிக்சன், பிரதீப் மற்றும் அக்ஷயா.
பிரதீப்பிற்கு இதெல்லாம் பிரச்னையே இல்லை. வழக்கம் போல் அப்பர் பெர்த்தில் ஏறி துண்டு போட்டு இடம்பிடித்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார். மணி மற்றும் ஜோவிகாவிற்கு இந்த இடம் புதியது. சின்ன வீட்டில் இருந்து மாயா வெளியில் செல்ல, ஜோவிகா உள்ளே வர, நந்தினியும் குந்தவையும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் பொன்னியின் செல்வன் காட்சி மாதிரியே இருந்தது.
இந்த ஷிஃப்டிங் பிராசஸ் முடிவதற்குள்ளாகவே மக்கள் கொலைவெறியுடன் அடுத்த வார நாமினேஷனைப் பற்றித் தீவிரமாக ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள’. ‘கடந்த முறை சின்ன வீடு செஞ்ச மாதிரி, நாமளும் பேசி வெச்சு டார்க்கெட்டை சரியா குறிபார்த்து அடிச்சு தூக்குவோம்’ என்கிற மாதிரி பெரிய வீடு திட்டமிட்டுக் கொண்டிருந்தது. அடுத்த வார நாமினேஷன் பட்டியல் ரணகளமாக இருக்கும் போல் தெரிகிறது. காத்திருந்து பார்ப்போம்.