பாலஸ்தீன அவலம் முடிவுக்கு வருமா? :சுவிசிலிருந்து சண் தவராஜா

உலக வரலாற்றில் இதுவரை எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடந்து விட்டன. காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள், வர்க்க விடுதலைக்கான போராட்டங்கள், தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் என பல விதமான போராட்டங்கள் நடந்துள்ளன. இத்தகைய போராட்டங்களுள் பல வெற்றி பெற்றுள்ளன. ஒரு சில தோல்வியில் முடிந்துள்ளன. வெற்றியில் முடிந்த போராட்டங்கள் ஆயினும் தோல்வியைத் தழுவிய போராட்டங்கள் ஆயினும் அவை நடைபெற்ற கால அளவு மிகக் குறுகியதாகவே இருந்துள்ளது. போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒருசில பத்தாண்டு கால இடைவெளியினுள் அவை ஏதோ ஒரு வகையில் முடிவுக்கு வந்திருக்கின்றன.

உலகில் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் போராட்டங்களுள் ஒன்று பாலஸ்தீன விடுதலைக்கான போராட்டம். தமது சொந்த மண்ணிலேயே இரண்டாந்தரப் பிரஜைகளாக, நாடற்றவர்களாக நடத்தப்படும் அவலத்தை எதிர்த்து அவர்கள் பல பத்தாண்டுகளாகப் போராடி வருகின்றனர். போராட்டம் நீடிக்க நீடிக்க போராடும் மக்கள் மாத்திரமன்றி போராட்டத் தலைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது அந்தத் தலைமை ஹமாஸ் அமைப்பின் கைகளுக்கு வந்திருக்கின்றது.

பாலஸ்தீனப் போராட்டத்தை உலகறியச் செய்த யாஸீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் பாலஸ்தீன மக்களின் சார்பிலே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தது. ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது. வன்முறை வழிமுறைகளைக் கைவிட்டு அரசியல் வழிமுறைகளுக்கு ஊடாக சொந்தத் தேசத்தின் விடுதலையை அடைவதற்கு முயற்சித்து வருகின்றது.

இதுவரை காலமும் பாலஸ்தீன விடுதலையை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்ட அனைத்து இயக்கங்களும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. எனினும் உலக நாடுகளின் அனுசரணையுடன் பேச்சுக்களில் கலந்து கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதல்தடவையாக இஸ்ரேலை அங்கீகரித்தது. பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளை அமைப்பதை யாஸீர் அரபாத் ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றுவரை அந்த உடன்படிக்கை முழுமையாக அமுலுக்கு வரவில்லை.

இந்த உடன்படிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட இஸ்ரேல், உடன்படிக்கையின் ஒரு முக்கிய அம்சமான பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க மறுத்து வருகின்றது.

இந்நிலையில் பாதிக்கப்படுபவனின் எதிர்வினை எவ்வாறானதாக இருக்க முடியும்? தனது பூர்வீக நிலத்திலே குடியமர்ந்து கொண்டு, பூர்வீகக் குடிகளை இரண்டாந்தரமாக நடத்துவது மட்டுமன்றி அவர்களது வாழிடத்தைக் கூட மறுப்பதை எவ்வகையில் நியாயம் என ஏற்றுக் கொள்வது?

இந்தக் கேள்வியின் எதிரொலியாகவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கரங்களில் நீண்டகாலமாக இருந்து வந்த பாலஸ்தீன அரசியலின் தீர்மானிக்கும் சக்தி ஹமாஸின் கரங்களைச் சென்றடைந்தது. ‘மயிலே, மயிலே என்றால் இறகு போடாது’ எனத் தெரிந்து கொண்டபின்னர் மாற்று வழியை நாடுவதைத் தவறென்று சொல்லிவிட முடியாது.

தற்போது நடைபெற்றுவரும் மோதல் ஆரம்பமானதற்கு ஹமாஸ் அமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்ற பரவலான கருத்து ஒன்று உள்ளது. ஒருவகையில் பார்த்தால் அதில் நியாயமும் உள்ளது. ஹமாஸ் அமைப்பு தாக்குதலை நடத்தியிராவிட்டால் காஸா மீதான கண்மூடித்தனமான குண்டு வீச்சுகளோ, பாலஸ்தீன மக்களின் பெருந்தொகை மரணங்களோ நிகழ்ந்திராது. ஆனால், இந்த மோதல் ஆரம்பமாவதற்கு முன்னதாக தினமும் ஒன்றிரெண்டு மரணங்களாவது பாலஸ்தீன மண்ணில் நிகழந்து கொண்டிருந்ததே. அதைப் பற்றி யார் பேசுவது? இஸ்ரேலியச் சிறைகள் பாலஸ்தீன மக்களால் அன்றாடம் நிறைந்து கொண்டிருந்ததே. அதைப் பற்றி யார் பேசுவது?

உண்மையில் பாலஸ்தீனர்களுக்கு என்ன தேவை, இஸ்ரேலுக்கு என்ன தேவை என்பது தொடர்பிலான அடிப்படைப் புரிதல் அற்றவர்களாகவே பாலஸ்தீன விவகாரத்தைப் பலரும் அணுகுவதைப் பார்க்க முடிகின்றது.

பாலஸ்தீன மக்களுக்கு எந்தவொரு உரிமையையும் தந்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேல் விடாப்பிடியாக இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் பாலஸ்தீன மக்கள் அனைவரையும் அவர்களின் பூர்வீக வாழிடங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டு பாலஸ்தீனம் முழுவதையும் தன்வயப்படுத்தி அதனை இஸ்ரேலாக மாற்றி விடுவதே இஸ்ரேலின் இலட்சியம்.

பாலஸ்தீனக் குழுக்களைப் பொறுத்தவரை இஸ்ரேலை அங்கீகரிக்காது விட்டாலும், அணுகுண்டு வல்லரசான இஸ்ரேலைப் போரில் வெற்றி கொண்டுவிட முடியாது என்ற யதார்த்தத்தை அவை உணராமல் இல்லை. அவலத்தைத் தருபவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அவலத்தைத் தருவது, முடியாதுவிட்டால் தமது வலியை எதிரியை உணரச் செய்வது என்பதாகவே பாலஸ்தீனர்களின் செயற்பாடுகள் இருந்து வருகின்றன.

தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையில் நடைபெறும் ஒரு போராட்டமாக இந்த மோதலைக் கற்பனை செய்து கொண்டால் கோலியாத் எப்போதும் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது இலகுவில் புரியும்.


பாலஸ்தீனப் பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்கும் மேற்குலகம் எப்போதும் இஸ்ரேலுக்குச் சார்பான நிலையிலேயே நின்றுகொண்டு பேச விரும்புவதே இங்கே அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. மத்தியஸ்தம் வகிப்பவர் பக்கச்சார்பு இன்றி இருந்தால்தான் உண்மையான நீடித்த தீர்வுக்குச் செல்ல முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் நிலைமை அவ்வாறு இல்லை.

மத்திய கிழக்கில் தனி ஒருவனாக அமர்ந்து கொண்டு, சுற்றிவர உள்ள நாடுகள் அனைத்தையும் பகை நாடுகளாக நடத்திக் கொண்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதை சாதாரண இஸ்ரேலிய மக்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஆனால் அத்தகைய ஒரு வாழ்க்கையையே அந்த மக்கள் மீது இஸ்ரேல் திணித்து வருகின்றது. தனக்கு ஆதரவு வழங்கும் எசமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காக, அவர்களின் அடியாளாகச் செயல்படுவதற்காக தனது மக்களையும், அவர்களின் நிம்மதியான வாழ்க்கையையும் பணயம் வைத்து இஸ்ரேல் செயற்படுகின்றது.

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதன் மூலம் இஸ்ரேலிய மக்கள் மாத்திரமல்ல அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு வழி ஏற்படும்.

உயிர்களின் மீது ஆடும் வெறித்தனத்துக்கு தாமதிக்காமல் தீர்வு எட்டப்படவேண்டும். ஆனால்,கொலைகளை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருக்கின்றன உலக நாடுகள்.

இரு தரப்புக்கு இடையேயான போரில் ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவிப்பது, எதிர்த்தரப்பு மக்களைக் கொல்லும் அதிகாரத்தை மறைமுகமாக ஒரு தரப்புக்கு வழங்குவதாகவே அர்த்தம். உலக நாடுகள் நினைத்தால், இரு தரப்பையும் கண்டித்து போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

ஆனால், ஏகாதிபத்திய சிந்தனையாளர்களும், ஆயுத உற்பத்தியாளர்களும் இலாபம் ஒன்றையே நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் நிலையில் அதற்கான வாய்ப்பை வழங்க முன்வரமாட்டார்கள் என்பது வெள்ளிடைமலை. உண்மையான மாற்றம் இஸ்ரேலிய மக்களிடம் இருந்து, அவர்களின் அரசியல் தலைமையிடம் இருந்து உருவாகினால் ஒழிய பாலஸ்தீன விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியமில்லை. அதுவரை பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் இரத்தக்களரி ஓயப் போவதில்லை என்பதே கசப்பான யதார்த்தம்.

Leave A Reply

Your email address will not be published.