மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை!
கனேடிய நெடுஞ்சாலையில் மனைவியை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைத்தீவு நபருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இச்சம்பவம் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி நடந்துள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு பெண்ணுடன் கொண்டிருந்த கள்ள உறவே மனைவியைக் கொல்ல முக்கிய காரணம் என்று நீதிமன்றத்தில் தெரியவந்தது.
தனது மனைவியைக் கொன்ற பின்னர், குற்றவாளி தனக்கு தொடர்புள்ள பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் வைத்து , யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்ஷிகா ஜெகநாதனை திருமணம் செய்து கொண்டுள்ளார், பின்னர் இருவரும் கனடா சென்று வாழ்ந்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட சசிகரன் தனபாலசிங்கம், தனது மனைவியுடன் பேருந்தில் பயணித்த பின், அதில் இருந்து இறங்கியதும் மனைவியை, நெடுஞ்சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். .
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளதுடன், கனேடிய பொலிஸார் கணவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சசிகரன் தனபாலசிங்கத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கனடாவின் எல்லெஸ்மியர் நகரில் உள்ள மொரிஸ் சாலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.